வெள்ளி, 3 செப்டம்பர், 2021

ஜெயகாந்த் கருத்து #தமிழர் என்றால் ஏன் எரிகிறது?



உண்மையிலேயே ‘தமிழ் களஞ்சியம்’,’திராவிட களஞ்சியம்’ சர்ச்சை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கள யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணம்.


இந்த சர்ச்சை தொடங்கும்போதே தெரியும் திராவிட சார்பாளர்களின் வாதங்கள் எப்படி அமையும் என்பது. 


வழமைபோல தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம் என திரிபடைந்த விதம், திருஞான சம்பந்தரை ‘திராவிட சிசு’ என ஆதிசங்கரர் அழைத்தது, அயோத்திதாசர் அந்த பெயரில் பத்திரிகை நடத்தியது என சுற்றி சுற்றி வருவார்கள் என்பது எதிர்ப்பார்த்ததுதான்.


இந்த வரலாற்று நிகழ்வையெல்லாம் நான் மறுக்கவில்லை. 


ஆனால் திராவிட சார்பாளர்கள் ‘வேண்டுமென்றே’ இதில் இருக்கும் ஒரு விடயத்தை ஒளிக்க முயல்கிறார்கள்.


• #ஒளிக்க முயலும் விடயம்


திராவிட சார்பாளர்கள் மேலே சொன்ன வரலாற்று உதாரணங்கள் எல்லாமே நடந்தவைதான்.


#ஆனால் அது பிறமொழியாளர்கள் தமிழை,தமிழரை குறிப்பதற்காக பயன்படுத்திய சொல்லாடல்கள்.நாம் ‘நம்மை’ அழைக்க பயன்படுத்திய பெயர் அல்ல என்பதுதான் அந்த ஒளிக்க முயலும் விடயம்.


• #திராவிட சார்பாளர்களுக்கு உதவ கூடிய இன்னும் சில வரலாற்று உதாரணங்களை தருகிறேன். 


“அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் {BCE 2nd cent} பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.  


இக் கல்வெட்டின் 13 வது வரியில்  113 ஆண்டுகள் 1300 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலிருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியினை காரவேலன் முறியடித்த செய்தி கூறப்படுகின்றது.


இங்கு தமிழர் கூட்டணியினைக் குறிக்கும் திரிபுச் சொல்லாக `த்மிர தேக சங்காத்தம் ` {Dramira } பயன்படுத்தப்படுகின்றது. 


அதே போல கிரேக்கக் குறிப்புகளில் சங்ககாலத் தமிழகம் `Damirica ` எனக் குறிக்கப்படுகின்றது. 


இவைதான் தமிழ் குறித்துக் கிடைக்கும் முதலாவது திரிபுச் சொற்களாகும்.  


`தமிழ்` என்று சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். 


அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` {Dravida } எனலாம்.


லலிதாவசுத்திர ` Lalitavistara` ( (translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `திராவிட லிபி` ( Dravidalipi ) என அழைக்கின்றது.  


இதுவே `திராவிடம்` என்ற சொல் தமிழினைக் குறிப்பதற்கான நேரடியான முதலாவது சான்றாகும்.


ஏறக்குறைய அதே காலப்பகுதியினைச் சார்ந்த  சமயவங்கா (“Samavayanga Sutta” )என்றொரு சமண நூலில் அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில் சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை.   


அதில்  `தாமிலி` / `தமிழி` ( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனாலேயே பிற்காலத்தில் கமில் சுவெலபில் ( Kamil Zvelebil ) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த சொற்களாக `தமிழி `, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். 


மேலே குறிப்பிட்ட நூல்கள், கல்வெட்டு என்பன பிராகிரத மொழியிலேயே இடம் பெற்றிருந்தன.


(வி.இ.குகநாதன் எழுதிய ‘திராவிடம்` என்றால் என்ன? எனும் கட்டுரையிலிருந்து)


மேலேயுள்ள பந்தி விவரிக்கும் வரலாற்று உதாரணங்களும் தமிழை, தமிழரை குறிக்க பிறமொழியாளர்கள் பயன்படுத்திய சொல்லாடலாகதான் ‘த்மிர’ (Dramira), கிரேக்கர்கள் பயன்படுத்திய ‘Damirica’, லலிதாவசுத்திர குறிப்பிடும் ‘திராவிட லிபி’( Dravidalipi ), சமயவங்கா என்ற சமண நூல் குறிப்பிடும் `தாமிலி` / `தமிழி` ( Damilli ) என்பவை வருகின்றன.


ஆக `தமிழ்` என்ற சொல்லை உச்சரிக்க முடியாத பிற மொழியிலாளர்கள் த்மிர,திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருக்கிறார்கள்.


• #இனி நம்முன் உள்ள கேள்வி


பிறமொழியாளர்கள் தமிழை,தமிழரை உச்சரிக்க முடியாமல் பயன்படுத்திய சொற்கள் என் இனத்திற்கான பெயராக மாறுமா அல்லது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழராகிய நாம் நம்மை அழைக்க பயன்படுத்திய சொல் நமக்கான பெயராக மாறுமா? 


இன்னும் எளிமையாக உங்களுக்கு புரியவைக்க வேண்டுமானால், ஒரு வேடிக்கையான உதாரணத்தை தருகிறேன்.


இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை வெள்ளைக்கார வர்ணணையாளர்கள் ‘முட்றையா முட்டளிடரன்’ என்றுதான் அழைப்பார்கள். காரணம் ஆங்கிலம் பேசும் வெள்ளைக்கார வர்ணணையாளர்களுக்கு இருந்த உச்சரிப்பு சிக்கல்.


இப்பொழுது திராவிட சார்பாளர்களின் வாதத்தின்படி இதை அணுகுவோம்.


‘முட்றையா முட்டளிடரன்’ எனும் சொல்லாடலும் முத்தையா முரளிதரனைத்தான் குறிக்கிறது. 


‘முத்தையா முரளிதரன்’ எனும் பெயரும் முத்தையா முரளிதரனைத்தான் குறிக்கிறது.


அதனால் நாம் ‘முட்றையா முட்டளிடரன்’ என்ற சொல்லையே பயன்படுத்துவோம் என்பதாக இருக்கிறது.


• #திராவிட சார்பாளர்கள் இது அறிந்து செய்கிறார்களா அல்லது அறியாமல் செய்கிறார்களா?


இது தெரிந்தே, வேண்டுமென்றே நுண்ணரசியல் நோக்குடன் செய்யப்படும் காய் நகர்த்தல்.


இன்னும் உடைத்து சொன்னால், ‘மேலேயுள்ள வரலாற்று உதாரணங்களை’ எல்லாம் சொல்லி தமிழரை ‘திராவிடர்’ என அழைப்பதுதான் சரி என வாதிடுபவர்களில் 80% பிறமொழியினராக இருக்கிறார்கள். தங்களின் பெயரை தூய தமிழில் வைத்திருப்பார்கள். ஆனால் அதை முகமூடியாக வைத்துக்கொண்டு இந்த நுண்ணரசியலை செய்கிறார்கள். மீதியுள்ள 20% தமிழர்கள்தான். ஆனால் இவர்கள் இந்த வரலாற்று உதாரணங்களில் உள்ள சாமர்த்தியமான வாதத்தை நம்பி ஏமாந்தவர்கள், அதிகார,பண ஆதாயத்திற்காக கட்சிகளை சார்ந்திருப்பவர்கள் என்பதாக இருக்கும்.


ஆனால் தமிழர்களில் 80% கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள் ‘நாங்கள் தமிழர்’, ‘எமது மொழி தமிழ் மொழி’ என்று.


காரணம் இந்த உணர்வு உளப்பூர்வமாக வருவது.


சங்ககால இலக்கியங்களை ‘திராவிட களஞ்சியம்’ என சொல்லும்போது எங்கோ இலங்கையில் பிறந்து,வளர்ந்த எனக்கு ஏன் பொத்து கொண்டு கோபம் வருகிறது? 


காரணம் இந்த சங்ககால இலக்கியம் என்னுடையது.என் இனத்தினுடையது.இது எனது பெருமிதம்.எனது தாய் மொழியின் செழுமையை,வளமையை கூறுவது.எனது வரலாற்று சொத்து. இதுதான் அந்த உளப்பூர்வமான உணர்வு.


• #இது ஒரு அவலம்


உலகமெங்கும் பரந்து வாழும் சில பத்து லட்சம் மக்களையே கொண்ட எங்களுக்கு எங்களை ‘தமிழர்கள்’ என அழைத்து கொள்ளமுடிகிறது.


தமிழின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தங்களை ‘தமிழர்கள்’ என அழைத்து கொள்ளவே திணற வேண்டியிருக்கிறது.

இது ஒரு பெரும் அவலம்.


க.ஜெயகாந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக