வியாழன், 28 ஜூன், 2018

ஜம்பை ஏரியைப் பராமரிப்பவர் காலடியில் என் தலையை வைக்கிறேன்!’ – மன்னரின் கல்வெட்டு

     1000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் ஆட்சியாளர் ஒருவரின் மன நிலையைப் பாருங்கள்… ஏரியைப் பராமரிப்பவர்களின் காலடியில் என் தலையை வைக்கிறேன் என்று கல்வெட்டே எழுதி வைத்திருக்கிறார் என்றால், விவசாயத்தையும், பாசன முறைகளையும் அவர்கள் எப்படியெல்லாம் போற்றிப் பாதுகாத்திருக்கிறார்கள்!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கல்வெட்டைப் பதிவு செய்துள்ளார் இப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுர் வட்டத்தில் திருக்கோயிலூர்- திருவண்ணாமலை வழித்தடத்தில் மணலூர்பேட்டையில் இருந்து மேலந்தல் கிராமம்செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் #ஜம்பைஎன்ற சிற்றூர் அமைந்துள்ளது.
இவ்வூரின் கிழக்கில் உள்ள குன்றில் அதியமான் பற்றிய குறிப்புகள் அடங்கிய தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது.
இந்த குன்றின் மேற்கில் உள்ள ஏரியில், கல் உரல் ஒன்று உள்ளது. ஐந்தடி உயரமும், மூன்றடி விட்டமும் உள்ள இந்த உரலில் நடுப்பகுதி குழி ஓரடி ஆழமும் கொண்டுள்ளது.
உரலின் மேல் விளிம்பில் 10 செ.மீ. அகலம் உள்ள பகுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகள் கரடுமுரடாக இருப்பதால் இது ஏதாவது ஒரு இடத்தில் நிலையாக புதைத்து வைத்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் உருவ அமைப்பைக் கொண்டு இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.
கல்வெட்டு கூறும் செய்தி…
இந்த கல்வெட்டில், “வ த ஸ்ரீ கள்ளையன் செய்த தருமம் கழத்துவப்பட்டியும் பனைப் பெரிக்கட்டின இவை என்முடி மெலன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏரியை கள்ளையன் என்பவர் உருவாக்கி இருக்கலாம். களத்துமேடு மூலமாகப் பெறப்படும் வருவாயிலிருந்தும், பனை மர குத்தகை மூலமாகவும் பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த பொறுப்பை தொடர்ந்து நிலைநாட்டி வருபவர்களின் காலடியை என் தலைமேல் வைத்துக்கொள்வேன்’ என்று கள்ளையன் கூறுவதாக இதில் காணப்படும் வாசகங்களுக்கு கல்வெட்டாய்வாளர்கள் பொருள் கூறுகின்றனர்”
பாசனத்துக்காக ஏரிகளை உருவாக்கி அதனால் பயனடையும் விவசாயிகளிடம் இருந்து களத்துமேட்டு பயன்படுத்தியதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏரியின் அருகில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டும் அவற்றை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த வருவாயையும் பயன்படுத்தி ஏரியை பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளதை இந்த கல்வெட்டுச் செய்தி உறுதி செய்கிறது.
கி.பி. 900-ம் ஆண்டு பல்லவர்கள் ஆட்சி முடிந்து சோழர்கள் ஆட்சிக்காலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில், ஜம்பை ஏரியில் கிடைத்த உரலில் குறிப்பிடப்படும் கள்ளையன் இப் பகுதியின் குறுநில ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

நன்றி  அண்பழகன்

செவ்வாய், 26 ஜூன், 2018

நபது உணவு முறையை குறை கூறிய பண்ணாட்டு வியபாரி அந்த பழைய உணவு முறையை புதுமை என்று வியபாரம் செய்கின்றான்

       இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல் விக்கிறான்.

உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான்.

மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் .

நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான்.

இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம்.

நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செய்கிறேன் என்பது தான் கசப்பான உண்மை.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புலுக்கையை அ ள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்...🌒💐🙏

10/6/2018 கவுரியா வாட்சப்குழு இளங்கோவன்

சங்க இலக்கியத்தில் வழிபாட்டுத் தொன்மங்கள்

     சங்க இலக்கியத்தில் வழிபாட்டுத் தொன்மங்கள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641 028
பேச : 9842495241.

     பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்குவது குறுந்தொகை ஆகும். இஃது எட்டுத் தொகையில் இடம் பெறும் அகநூல்களுள் ஒன்றாகும். இதில் கடவுளரைப் பற்றியும், கடவுள் வழிபாடு குறித்தும் பல்வேறு தொன்மக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழந்தமிழரின் சமய நம்பிக்கைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன.
தொன்மம் – விளக்கம்
தொன்மம் (ஆலவா) என்பது பழமை எனப் பொருள்படும். அகராதிகள் தொன்மம் என்பதற்கு பழமை, செய்யுளில் இடம் பெறும் எண்வகை வனப்புகளில் ஒன்று எனப் பொருள் தருகின்றன.பொதுவாக தொன்மம் எனப்படுவது பண்டைய மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கலைகள் போன்ற வாழ்க்கையைச் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்கு முறைகளைக் குறிக்கும்.
‘‘தமிழில் வீரம் என்பதற்கு நிகரான சொல்லாக ‘பெருமிதம்’ என்பதனை பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். அதுபோலவே புராணம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக ‘தொன்மை’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது’’(யாழ். சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப., 8)
தொன்மம் என்பது நமக்குள் புதிதாக உருவாவதன்று அது நம் பிறப்பிலிருந்தே உண்டு என்பதை, ‘‘தொன்மமானது மனத்தின் விழிப்புநிலையில் ஆழ்மனத்தில் கருப்பெறுகின்றது. நம்மைக் கேட்காமலேயே உடல் வளர்வதைப் போலவே இயற்கையாகவே தொன்மங்கள் உரம் பெறுகின்றன’’     ( கதிர்.மகாதேவன், தொன்மம், ப. 19) என்கிறார் கதிர் மகாதேவன்.
‘‘தொன்மம் என்பது புனிதமான உண்மை (ளுயஉசநன வுசரநன) என்கிறது அமெரிக்கானா கலைக்களஞ்சியம்.  மேலும், தொன்மம் செயல்பாட்டின் அடிப்படையில் சடங்குகளுடனும் சமயங்களுடனும் தொடர்புடைய சமுதாயம் சார்ந்த கதை’’ (யாழ்.சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப. 49) எனலாம்.
ஆலவா (மித்) என்ற ஆங்கிலச் சொல் ஆலவா என்ற கிரேக்கச் சொல்லின் வேர்ச் சொல்லாகும். இதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக ‘தொன்மம்’ கையாளப்பட்டு வருகிறது. கடவுள் பற்றியும் உயர்மனிதர்கள் பற்றியும் அமைந்த செய்திகள் தொன்மத்தில் அடங்கும்.
தொன்மம், பழமரபுக் கதைகள் இரண்டும் ஒன்றுமையுடையதாக இருப்பினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு தொன்மம் கடவுளர் செயல்களை விரித்துரைப்பது; பழமரபுக் கதைகள் மனிதர்களை முதன்மைப்படுத்துவது; சமயம் சார்ந்தும் சடங்குகளைப் பற்றி விளக்குவதும் தொன்மத்தில் அடங்கும்.
தொல்காப்பியம் தரும் விளக்கம்
தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் தொன்மம் என்பதற்கு,
‘‘தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே’’
என்கிறது தொன்மை எனப்படுவது, உரையோடு கூடிய பழமையாகிய கதைப் பொருளில் வருவது’’ (தொல் – செய். இளம்பூரணர் உரை, நூ.எ., 538)என்று இளம்பூரணர் உரை விளக்கமளிக்கிறது.
மேலும், முதல் பொருளுள் நிலம் பற்றிக் கூற விளைந்த தொல்காப்பியர்,
‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’
(தொல்., அகத்திணை., நூற்பா, 5)
என்ற இந்நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார்.
குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
குறுந்தொகையில் இடம் பெறும் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை,
1.முருகன் பற்றிய தொன்மம்
2.கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்
3.இயற்கை வழிபாடு
4.நடுகல் வழிபாடு  என நான்கு வகையாகப் பகுக்கலாம்.
முருகன் பற்றிய தொன்மம்
‘‘சேயோன் மேய மைவரை உலகம்’’ எனத் தொல்காப்பியம் செப்புவதிலிருந்து குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்பது புலனாகிறது.
குறுந்தொகையில் முருகன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.  முருகப் பெருமான் அசுரர்களை அழித்த புராணச் செய்தியை,
‘‘செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட்டி யானை
கழல்தொடிச் சேஎய் குன்றம்’’ (குறுந்.,பா.உ.1)
என்ற வரிகள் விளக்கி நிற்கின்றன.  இதேபோல் முருகன் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை,
‘‘அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இனர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து’’
(திருமுருகாற்றுப்படை, 59-60 வரிகள்)
எனத் திருமுருகாற்றுப்படையும்,
‘‘பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு
சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர்உழக்கி
தீஅழல் துவைப்ப திரிய விட்டெறிந்து
நோயுடை நுடங்கு சூர்மா முதல் தடிந்து
…………………
மாய அவுணர் மருங்குஅறத் தபுத்த வேல்’’
(பரிபாடல் செவ்வேள் 5 : 1-7 வரிகள்)
எனப் பரிபாடலும் எடுத்துரைக்கின்றன.  இச்செய்தியினைக் கந்தபுராணத்திலும் காணலாம்.
கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்
மலையின் ஒரு பகுதியில் இடம் பெற்ற அணங்கு போன்ற பெண் தெய்வம் அல்லது தெய்வத்தால் வரையப்பட்ட பாவை கொல்லிப்பாவையாகும்.
சேர மன்னனின் மலையின் மேற்குப் பகுதியில் வருத்தக் கூடிய கொல்லித் தெய்வம் இருந்ததனை,
‘‘பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய
நல்லியற் பாவை’’ (குறுந்தொகை, ப., 130)
என்ற பாட்டாலும்,
‘‘வல்வில் ஓரி கொல்லிக் குடவரை
பாவையின் …….. ……….. ……..’’
என்ற பாட்டாலும் அறிய முடிகிறது. மேலும்,
‘‘…………. ………… பயங்கெழு பலவின்
கொல்லிக் குடவரை பூதம் புணர்த்த
புதிதியல் பாவை’’                      
(குறுந்தொகை, ப., 145)
என்ற பாடல் வாயிலாகவும், கொல்லிமலையின் மேற்குப் புறத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவை உண்டென்பதை,
‘‘பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக்
குடவயின் ……….. …………… ……………
நெடுவரைத் தெய்வம் எழுதிய
வினைமான் பாவை’’
(நற்றிணை, பா.எ., 192)
என்ற பாடலின் வாயிலாகவும் உணர முடிகிறது. இவை கொல்லித் தெய்வம் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.
இயற்கை வழிபாடு
பண்டையத் தமிழர்கள் இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்தனர்.  அதனால், அச்சத்தைப் போக்க எண்ணி இயற்கையோடு கூடியியைந்து வாழ்ந்தனர்.
சங்க கால மக்கள் பெண்கள் பிறையைத் தெய்வமாக தொழுது வணங்கினர் என்பதை,
‘‘செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே’’
(குறுந்தொகை, ப., 459)
என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இப்பாடலில் பிறையைப் பலசமயத்தோடும் தொழுதனர் என்ற செய்தி இடம் பெறுகிறது.  மேலும் கன்னிப் பெண்களும் பிறையை வணங்கினர். இச்செய்தியை,
‘‘ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை’’       (அகநானூறு, பா.எ., 239)
என்னும் அகநானூற்றுப் பாடல் வரிகளும்,
‘‘குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழி சிறக்க நின்வலம்படு கொற்றம்’’
(மதுரைக் காஞ்சி, 193-194 வரிகள்)
எனும் மதுரைக் காஞ்சி வரிகளும் புலப்படுத்துகின்றன.
‘‘கன்னிப் பெண்கள் மட்டும் பிறையைத் தொழுவதற்கானக் காரணம் நல்ல கணவனைப் பெற்று இல்லறம் சிறக்கவும், கரு வயிற்றில் உருவாகவும், மழைவளம் சுரந்து வளம் பொழிய வேண்டும் என்பதற்காகவும் ஆகும்’’ (மேற்கோள் விளக்கம் – கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப., 62).
நடுகல் வழிபாடு
தம் நாட்டினைக் காக்கும் பொருட்டு, பகைவரோடு போரிட்டுப் பட்டு வீழ்ந்த வீரனுக்காக எடுக்கப்படுவது ‘நடுகல்’ எனப்படும்.
இந்நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் பெயரும் பீடும் எழுதி, தெய்வமாக வழிபட்டு வந்ததைத் தொல்காப்பியர் காலந்தொட்டு அறிய முடிகிறது.  இதனையே,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபின் கல்லொடு புணர’’
(தொல், புறத்., இளமபூரணர் உரை, நூ.எ., 63)
எனத் தொல்காப்பியம் மொழிகிறது.
மறக்குடியில் பிறந்த அனைவரும் இந்த நடுகல் வழிபாட்டைத் தம் இனத்திற்குச் சிறந்ததெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர். இச்செய்தியை,
‘‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே’’
(புறநானூறு, பா.எ., 335)
எனும் இப்புறநானூற்றுப் பாடலும் புலப்படுத்துகிறது.
இத்தகு புகழ்வாய்ந்த நடுகல்லில் வீரரது பெயரும் பீடும் பொறிக்கப்பட்டு இருப்பதற்கு,
‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்குநிலை மறவர்’’ (பா.எ., 67)
என்ற அகநானூற்றுப் பாடலே சிறந்த சான்றாகும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட நடுகல்லிற்கு வீரர்கள் தங்களது கிடுகினையும், வேல்களையும் வரிசையாய் நிரல்களாக நட்டு அரண் செய்தனர். இந்தச் செய்தியை,
‘‘மாலைவேல் நட்டு வேலி யாகும்’’ (குறுந்தொகை, ப., 358)
எனும் குறுந்தொகைப் பாடல் வரியும்,
‘‘கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண் போல’’ (பட்டினப் பாலை, 78-79 வரிகள்)
என்ற பட்டினப் பாலை வரிகளும் தெளிவாக உணர்த்துகின்றன.    இங்ஙனம் பழந்தமிழ் செவ்வியல் இலக்கியமான குறுந்தொகையில் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்கள் அமைந்து தமிழர் தம் பண்பாட்டினையும் சமயஞ்சார்ந்த நம்பிக்கையினையும் புலப்படுத்துகின்றன.

16/6/2018 கவுரியா வாட்சப்குழு

புதன், 20 ஜூன், 2018

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள்…..

     வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும். இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.

இவற்றுள் இரண்டாம் பத்து என்னும் பகுதியைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்புலவரைச் சிறப்பிக்க நினைத்த மன்னன் இமயவரம்பன் உம்பற்காட்டுப் பகுதியில்(மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்குப் பகுதி) ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டு வருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுவரை பகுதியும் வழங்கினான் என அறிய முடிகிறது.

கடம்பர் என்ற கடற்கொள்ளையரை அழித்து வெற்றியுடன் மீண்ட இமயவரம்பன் செடுஞ்சேர லாதனை அவன் நாட்டு மக்கள் பாராட்டி வரவேற்றனர். அக்காட்சியைக் கண்ட புலவர் பெருமா னுக்குக், கடலுள் மாமர வடிவில் இருந்த சூரபத்மனை அழித்து மீண்ட முருகன் நினைவுக்கு வருகின்றான். அம் முருகனாகவே புலவர் இமயவரம்பனை எண்ணிப் பாடியுள்ளார்.

கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக் (கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

சேரநாட்டுப் படை மறவர்கள் கடம்பர்களின் கலத்தையும் நாட்டையும் பாழ்படுத்தினர். சேரர் படையுடன் போரில் வெற்றிபெற முடியாது என உணர்ந்த கடம்பர்கள் தங்கள் காவல் மரத்தை மட்டுமாவது காத்துக்கொள்ள நினைத்தனர். அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை அழிக்கும் முன் கடம்பர்களையும் சேரர் படை அழித்தது. கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி, வீழ்ந்த கடம்பமரதைக் குடைந்து முரசாக்கி மறவர்கள் முழக்கம் செய்தனர். அம் முழக்கொலி கேட்ட சேரநாட்டுப் படை மறவர்களும் மக்களும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.

இதனைக் கண்ட குமட்டூர்க் கண்ணனார்,

“வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,
வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல்
ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு…
“பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்,
போர்அடு தானைச் சேர லாத!” (பதிற்றுப்பத்து 2: 1-16)
எனவும்,

“துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை” (பதிற்றுப்பத்து 17: 4-5)
எனவும்

“இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் ” (பதிற்றுப்பத்து 20 :2-5)
எனவும் பாடியுள்ளார்.

அகநானூற்றுப் புலவர் மாமூலனார் அவர்கள் (கி.மு.மூன்றாம் நூற்றாண்டு. பார்க்க: பே.க.வேலாயுதனாரின் சங்ககால மன்னர் வரிசை,1997)

“சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன”(அகம். 347)

(பொருள் : பெரும் படையுடையவன் சேரலாதன். அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான். அம் முரசு முழங்கியது போல) எனவும்

“வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து” (அகம். 127 )

(பொருள்: வெற்றி தரும் முரசத்தையுடையவன் சேரலாதன்.அவன் கடலில் பகைவரை வென்று அவரது காவல் மரத்தை வெட்டினான்) எனவும் பாராட்டியுள்ளனர்.

பண்டு கிரேக்க, உரோமை நாடுகளுக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்கள், மிளகு முதலிய பொருள்களும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் மேலைக்கடற்கரை வழிச் சென்றமையும் அந்நாட்டின் செல்வம், பொருள்கள் தமிழகம் வந்ததையும் வரலாற்றால் அறிகிறோம். அவற்றைக் கடம்பர்கள் கொள்ளையடித்ததையும் ஒருவாறு உய்த்துணர முடிகிறது.

இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும். இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை. கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது. தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

– முனைவர் மு.இளங்கோவன்

கவுரியா வாட்சப் குழு ஒரிசா பாலு 10/06/2018

அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள்

Thursday, 03 July 2014 03:19
நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

     அறிவியல் என்பதற்கு விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், ஆய்வுத்துறை, அறிவு, பொருளாய்வுத்துறை, புறநிலை ஆய்வுநூல், அறிவு பற்றிய துறை, பருப் பொருள்களை ஆயும் நூல் தொகுதி ஆகிய கருத்துக்கள் அகராதியை அலங்கரித்து நிற்கின்றன. மனித இனம், வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் யாவும் மேன்னிலையடைவதற்கு உறுதுணையாயிருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மண்ணியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பல துறைகள் அறிவியலில் அடங்கும். இவ்வாறான அறிவியலைப் பூமித் தாயின் மக்களில் ஒரு சிலர் அறிவியற் பூங்காவில் நுளைந்து தத்தமக்கான துறைகளில் ஆர்வங் கொண்டு உலக முன்னேற்றத்தில் உதவிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேவை மகேசன் சேவையாகும். இனி, பண்டைத் தமிழர்களின் பழமை வாய்ந்த அறிவியல் பற்றிய செய்திகள் பழந் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்ற பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல்  இலக்கண,  இலக்கிய  நூலை  யாத்த  தொல்காப்பியர் (கி.மு. 711) இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.

 (1) இவ்வுலகம்  ஐம்பெரும்  பூதங்களான நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர், என்பன கலந்ததொரு மயக்கமான சூழ்நிலையில் இவ்வுலகம் தோன்றிற்று என்பது ஓர் அறிவியல் உண்மையாகும். இவ்வுண்மையைத் தொல்காப்பியர் இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால் பின்வரும் பாடல் வரிகளில் நிறுவியுள்ளமை போற்றற்குரியதாகும்.

                       'நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
          கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
          இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத்
          திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.'
                                          – (தொல். பொருள். மரபியல் - 635)  

உலகமானது நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங்கலந்த மயக்கமாதலான், மேற்கூறப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழுவுதல் இல்லாமல், திரிவுபடாத சொல்லோடு தழுவுதல் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இவ்வண்ணம் தொல்காப்பியர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாய் நிலவெளி, விண்வெளி விஞ்ஞானம் பேசுவதையும் காண்கின்றோம்.

(2) புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிற்கு உயிர் இல்லை என்று கூறுவோர் பலர் இருந்த காலமது. இந்நிலையிற்றான் இந்தியத் தாவரவிஞ்ஞான மேதை ஜெகதீஸ் சந்திர போஸ் (Jegadish Chandra Bose,  கி.பி.30.11.1858- 23.11.1937) அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்வு, அறிவு என்பன உள்ளன என்பதை நிரூபித்துக் காட்டிப் பரிசும், பாராட்டும் பெற்றுக்கொண்டார். இதன்பின்புதான் மக்களும் அவைகளுக்கு உயிர் உண்டென்ற நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

ஆனால் இதற்கு இரண்டாயிரத்து ஐந்து நூறு (2,500) ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்காப்பியனார்  தாவரத்தின்  உயிர், உணர்வு, அறிவு  பற்றியும், மற்றைய  உயிரினங்களின்  அறிவு, உணர்வு, உயிர் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறிச் சூத்திரங்கள் அமைத்துள்ளார். அதில் பின்வரும் சூத்திரத்தில் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐந்தறிவுயிர், ஆறறிவுயிர் ஆகிய ஆறு வகையான உயிரினங்களில் உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களையும் அடக்கிக் காட்டப்பட்ட சீரினையும் காண்கின்றோம்.

                           'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
            இரண்டறி வதுவே அதனொடு நாவே
            மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
            நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
            ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
            ஆறறி வதுவே அவற்றொடு மனமே
            நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.' – (பொருள். 571)

ஓரறிவு உயிராவது உடம்பினாலே அறிவது என்றும், ஈரறிவு உயிராவது உடம்பினாலும;> வாயினாலும் அறிவது என்றும், மூவறிவு உயிராவது உடம்பினாலும;>  வாயினாலும், மூக்கினாலும் அறிவது என்றும், நாலறிவு உயிராவது உடம்பினாலும;>  வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும் அறிவது என்றும், ஐந்தறிவு உயிரானது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறிவது என்றும், ஆறறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும், மனத்தினாலும் அறிவது என்றும் தொல்காப்பியர் கூறுகின்றார். இவ்வண்ணம் உயிர்கள் ஆறு வகை ஆயின.
மேலும் தொல்காப்பியர் ஓரறிவிலிருந்து ஆறறிவுக்குரிய உயிரினங்களின் பெயர்ப் பட்டியலையும் தனித்தனியே வகுத்துத் தந்துள்ள சூத்திரச் சிறப்பினையும் பார்ப்போம்.

1. ஓரறிவு உயிர்கள்

                  'புல்லும் மரனும் ஓரறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 572)

2. ஈரறிவு உயிர்கள்

                   'நந்தும் முரளும் ஈரறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 573)

3. மூவறிவு உயிர்கள்

                   'சிதலும் எறும்பும் மூவறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 574)

4. நாலறிவு உயிர்கள்

                  'நண்டும் தும்பியும் நான்கறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.'  -- (பொருள். 575)

5. ஐயறிவு உயிர்கள்

                  'மாவும் புள்ளும் ஐயறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' --  (பொருள். 576)

6. ஆறறிவு உயிர்கள்

                  'மக்கள் தாமே ஆறறி வுயிரே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.'  --  (பொருள். 577)

புல், மரம், கொட்டி, தாமரை ஆகியவை ஓரறிவு உடையனவென்றும் நந்தும், முரளும், சங்கு, நத்தை, அலகு, நொள்ளை, சிப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன ஈரறிவு உடையனவென்றும் சிதலும், எறும்பும், அட்டை முதலியன மூவறிவு உடையனவென்றும் நண்டு, தும்பி, ஞிமிறு, சுரும்பு போன்றவை நான்கு அறிவினை உடையனவென்றும் நாற்கால் விலங்குகள், பறவைகள், பாம்பு, மீன், முதலை, ஆமை என்பன ஐவகை அறிவினை உடையனவென்றும் மக்கள், தேவர், அசுரர், இயக்கர் முதலாயினார் ஆறறிவு உயிர்களென்றும் கூறி உலக உயிரனைத்தையும் ஆறு வகையில் அடக்கிக் காண்பித்தவர் தொல்காப்பியர். இவற்றை உற்று நோக்கின், தொல்காப்பியர் காலத்தில் தாவரவியல், உடற்கூற்றியல், பறவையியல், விலங்கியல் போன்ற அறிவியற் துறைகள் மேம்பட்டிருந்தமை புலனாகின்றது.

புறநானூறு

(1) கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் ஐம்பெரும் பூதங்களான (i) நிலனையும், (ii)  வானையும், (iii)  காற்றையும், (iv)  நெருப்பையும், (v)  நீரையும், உலகம் கொண்டுள்ளது என்று சங்ககாலப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் ஓர் அறிவியற் பாடலைப் பாடியுள்ளார்.

                                              'மண் திணிந்த நிலனும்,
                    நிலம் ஏந்திய விசும்பும்,
                    விசும்பு தைவரு வளியும்,
                    வளித் தலைஇய தீயும்,
                    தீ முரணிய நீரும், என்றாங்கு
                    ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்.....' (புறம். 2: 1-6)

இதில் மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்த நீரும் உண்டாயின என்ற அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.

(2) சங்க காலப் புலவரான உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் கீழ்க் காணும் புறநானூற்றுப் பாடலில் 'செஞ்ஞாயிற்றின் வீதியும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைச் தாமே அவ்விடஞ் சென்று அளந்து அறிந்தவரைப் போல, அவை இப்படிப்பட்டவை என உரைக்கும் அறிவுடையோரும் உளர்' என்று விண்ணியல் விஞ்ஞானம் விரிவாய்ப் பேசப்படும் இலக்கிய விந்தையைக் காண்கின்றோம்.

                                 'செஞ்ஞா யிற்றுச் செலவும்,
              அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
              பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
              வளி திரிதரு திசையும்,
              வறிது நிலைஇய காயமும், என்றிவை
              சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
              இனைத்து என்போரும் உளரே....'  - (புறம். 30: 1-7)

அகநானூறு

கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் 'தோழி வாழ்வாயாக! நான் கூறுவதையும் கேட்பாயாக! மழையானது பெய்யும் இடத்தை விட்டுச் சென்ற ஆகாயத்திலே, சிறுமுயலாகிய மறுவானது தன் மார்பகத்தே விளங்கச் சந்திரன் நிறைந்தவனாகி, உரோகிணி தன்னுடன் சேரும் இருளகன்ற நடு இரவில், அதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாள் இரவில், வீதிகளிலே விளக்கு வைத்து, மாலைகள் தொங்கவிட்டுப் பழமையைத் தனக்குப் பெருமையாகவுடைய மூதூரில் பலருடன் ஒன்று கூடி விழாக் கொண்டாடுவார்கள்...' என்று சங்கப் புலவர் நக்கீரர் ஒரு சிறந்த பாடலைத் தந்துள்ளார்.

                            'அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
                              .................................................................
             மழைகால் நீங்கிய மாக விசும்பில்
            குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
            அறுமீன் சேறும் அகல்இருள் நடு நாள்:
            மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
            பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
            விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
                             ...........................................................................'     – (அகம். 141: 1, 6-11)

திருக்கார்த்திகைத் திருவிழாக் கொண்டாடும் வழக்கம் அன்றைய மக்கள் மத்தியில் நிறைந்திருப்பதை எம்மால் உணரமுடிகின்றது. சந்திரனும் கார்த்திகை நட்சத்திரமும் அண்மித்திருக்கும் நாளைத் திருக்கார்த்திகை நாள் என்று விழாவெடுத்துக் கொண்டாடினர். இதில், ஆகாயம், சந்திரன், உரோகிணி, திருக்கார்த்திகை என்று விண்வெளி அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.

பதிற்றுப்பத்து

கடைச் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் அறிவியல் பற்றிய செய்திகள் எவ்வண்ணம் பேசப்படுகின்றன என்பதையும் காண்போம்.

(1) நிலம், நீர், காற்று (வளி), வானம் (விசும்பு) ஆகிய நான்கினதும், விண்மீன்கள் (நாள்), கிரகங்கள் (கோள்), சந்திரன் (திங்கள்), சூரியன் (ஞாயிறு), பெருநெருப்பு (கணை அழல்) ஆகிய ஐந்தினதும் அளப்பரிய பேராற்றல்களைச் சங்கப் புலவர் குமட்டூர்க் கண்ணணார் சிறந்ததொரு பாடலை இரண்டாம் பத்தில் தந்துள்ளார்.

                                          'நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
                  அளப்பு அரியையே;
                  நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
                  ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை; ....'- (14: 1-4)

(2)  இனி மூன்றாம் பத்தில் சங்கப் புலவரான பாலைக் கௌதமனார் பாடியுள்ள ஒரு சீரிய பாடலையும் பார்ப்போம். நீண்ட தொலைவிலுள்ள வானத்திலிருந்து ஒளிவிடும் மின்னல் வெளிச்சம் விண்ணிலும் மண்ணிலும் பரவி நிற்பதாகவும், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் ஆற்றல் பற்றியும், ஒளி வீசிக் கொண்டு வானில் கதிரவன் சுடர்பரப்ப, அதற்குச்  சற்று  வடக்கேயுள்ள சிறப்புமிகு  வெள்ளிக்கோள் என்னும்  சுக்கிரன், பலன் தரும் மற்றக் கோள்நிலைகளும் பொருந்தி நிற்கையில் நல்ல மழை பொழியும் என்று கூறப்படுகின்றது.

                                  'நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு
                                    .................................................................................
               நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும்
                                    ...................................................................................
               வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
               வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
               பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப,
               கலிழும் கருவியொடு கை உற வணங்கி....' – (24: 1, 15, 23-26)

வெள்ளிக் கோள் வடக்கே தோன்றினால் நல்ல மழை பொழியும் என்பது ஒரு வழக்காகும். வானம், மின்னல், வெளிச்சம், விண், மண், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், கதிரவன், சுக்கிரன், மழை ஆகிய இயற்கை வளங்களைத் தொட்டுச் செல்லும் புலவர் ஆகாயத்தில் பறந்து திரியும் ஒர் அற்புதக் காட்சியை நம் முன் வைத்துச் சென்றுள்ளார்.
 
பரிபாடல்

கடைச் சங்கத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் அறிவியல் பேசும் பாங்கினை நல்லெழுநியார் என்னும் புலவர் யாத்த ஒரு பாடலில் காண்போம். 'சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்று உரைக்கப்படும் ஐந்தான அவையும் நீயே யாவாய்! இசைமை எனப்படும் முதலான ஓசையால் அறியப்படும் வானமும் நீயே! ஓசை, ஊறு என்னும் இரண்டானும் அறியப்படும் காற்றும் நீயே! ஓசை, ஊறு, ஒளி என்னும் மூன்றானும் உணரப்படும் தீயும் நீயே! ஓசை, ஊறு, ஒளி, சுவை என்னும் நான்கானும் உணரப்படும் நீரும் நீயே! ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்தானும் முற்ற உணரப்படும் நிலனும் நீயே! என்று திருமாலைப் போற்றுகின்றார்.

                       '....................................................
          சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
                        ...................................................
          ஓன்றனிற் போற்றிய விசும்பும் நீயே!
          இரண்டி னுணரும் வளியும் நீயே!
          மூன்றி னுணரும் தீயும் நீயே!
          நான்கி னுணரும் நீரும் நீயே!
          ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே!.......' – (பாடல் 13: 14, 18-22)


விசும்பும், வளியும், தீயும், நீரும், நிலமும் ஆகிய இயற்கையான ஐம்பொறிகளும் இங்கேயும் பேசப்படுகின்றன.

ஐங்குறுநூறு


இந்நூலின் பின்வரும் கடவுள் வாழ்த்தைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனும் கடைச் சங்கப் புலவர் பாடியுள்ளார்.

                                          'நீலமேனி வாலிழை பாகத்து
                  ஒருவன் இருதாள் நிழல்கீழ்
                  மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே.'


நீலநிற மேனியையும் தூய அணிகளையும் உடைய உமையவளைத் தன் உடலில் ஒரு பாகமாய்க் கொண்ட ஒப்பில்லாத சிவபெருமானின் இரண்டு திருவடிக் கீழ் மூன்று வகைப்பட்ட உலகங்களும் நிலை பெற்றுள்ளன. மூவகையுலகு என்பது மேல், நடு, கீழ் என்பனவாம். அவைதான் விண், மண், பாதலம் ஆகும். பரம்பொருளிலிருந்து வானம் தோன்றியது, வானத்திலிருந்து காற்றுத் தோன்றியது. காற்றிலிருந்து தீ தோன்றியது. தீயிலிருந்து நீர் தோன்றியது. நீரிலிருந்து நிலம் தோன்றியது என்று சிலர் உரைப்பர். இங்கே ஐம்பூதங்களின் பரம்பொருளையும் காண்கின்றோம்.

சிலப்பதிகாரம்

சங்கம் மருவிய காலத்தில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்  'திங்களைப் போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! மாமழை போற்றுதும்!' என்று பரந்த வானியல் பேசப்படுவதையும் காண்கின்றோம். இங்கே இயற்கையான சந்திரனையும், சூரியனையும், மாமழையையும் ஒரே நேரத்தில் ஏற்றிப் போற்றும் இலக்கிய மேதை இளங்கோவடிகள் விண்வெளி பேசும் விஞ்ஞானியாய் விண்ணில் பறந்து திரிவதையும்  உற்று நோக்கிப் பார்க்கின் தெளிவாகும்.

முடிவுரை

இதுகாறும் தொல்காப்பியத்தில் நிலம், ஆகாயம், தீ, நீர், காற்று ஆகிய ஐம்பூதங்கள் பற்றியும், தாவரத்தின் உயிர், உணர்வு பற்றியும், மற்றைய உயிரினங்களின் அறிவு, உயிர், உணர்வு பற்றியும், ஓரறிவிலிருந்து ஆறறிவுள்ள உயிரினங்களின் பெயர்ப்பட்டியல் பற்றியும், புறநானூற்றில் நிலனையும், வானையும், காற்றையும், நெருப்பையும், நீரையும் உலகம் கொண்டுள்ளது பற்றியும், ஞாயிற்றின் வீதியும், இயக்கமும், இயக்கத்தால் சூழும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானம் ஆகியவை பற்றியும், அகநானூற்றில் ஆகாயம், சந்திரன், உரோகிணி, திருக்கார்த்திகை ஆகியவை பற்றியும், பதிற்றுப்பத்தில் விண்மீன்கள், கிரகங்கள், சந்திரன், ஞாயிறு, நெருப்பு மின்னல், வெள்ளிக்கோள் ஆகியவற்றின் ஆற்றல் பற்றியும், பரிபாடலில் சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்பன பற்றியும், ஐங்குறுநூற்றில் விண், மண், பாதலம் ஆகிய மூவுலகு பற்றியும், சிலப்பதிகாரத்தில் சந்திரன், சூரியன், மாமழை என்று பரந்த வானியல் பற்றியும் பேசப்பட்டுள்ளதை மேலே பார்த்தோம்.

சங்க இலக்கியங்களில் இலக்கியம் மட்டும்தான் உள்ளது என்று கூறமுடியாது. அவற்றில் அறிவியல் சார்ந்த விடயங்களும் நிறைந்துள்ளன என்பதை மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். உலகம் நவீனமயமடைந்த வண்ணமுள்ளது. எனவே அறிவியல் சார்ந்த கல்வி மிக முக்கியம் வேண்டற்பாலது. தனி இலக்கியங்களைவிட அறிவியல் சார்ந்த இலக்கியங்கள் மக்களுக்குப் பெரும் பயனை நல்கும்.

சில இலக்கியங்களில் அறிவியலும் கலந்திருப்பது உண்மை. இதற்கு மேற்காட்டிய நூல்கள் சான்றாகும். இவற்றை இலக்கியக் கண்கொண்டு படித்தால் இலக்கியம் முன்வந்து நிற்கும். அதை அறிவியற் கண்கொண்டு பார்த்தால் அறிவியல்தான் முந்திநிற்கும். எனவே இலக்கியமும், அறிவியலும் சமநிலையில் அமைவது சாலச் சிறந்ததாகும்.

காலத்தால் மூத்த இலக்கிய, இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அறிவியல் சார்ந்த செய்திகளையும் புகுத்தி முதற் காலடியெடுத்து வைத்த பெருமை தொல்காப்பியனாரைச் சாரும். இவரைத் தொடர்ந்து பின்னெழுந்த சங்க இலக்கிய நூல்களிலும் அறிவியற் செய்திகள் பரந்து செறிந்துள்ளதையும் காண்கின்றோம். அறிவியல் சார்ந்த இலக்கியங்களின் வாழ்நாள் மிக நீண்டதென்பதும் தெளிவாகின்றது. மேற் காட்டிய நூல்கள் இதற்குச் சான்று பகரும். எனவே அறிவியலை முன்னிலைப்படுத்தி அதனால் வரும் பயனை ஏற்று எம் வாழ்வியலை மேம்படுத்தத் திடசித்தம் கொள்வோமாக!

wijey@talktalk.net

கவுரியா வாட்சப் குழு 10/06/2018 ஒரிசா பாலு அவர்கள் பகிர்தது

ஞாயிறு, 17 ஜூன், 2018

சங்க இலக்கியத்தில் வானியல்


     மனிதனின் அறிவியல் பிரிவின் ஒரு கூறே வானியல். இன்றைக்கு வானியலின் வளர்ச்சி மனிதனை வேற்று கிரகவாசிகளாக மாற்றும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஸ்பிரிட், ஆப்பர்சினிட்டி ஆகிய விண்கலங்கள் செவ்வாய்க் கோளை ஆராய மனிதனால் ஏவப்
பட்டவை. மேலும், இன்றைய அறிவியலாளர்கள் ஞாயிறை விட 320 மடங்கு பெரிய, 1 கோடி மடங்கு ஒளி வீசக்கூடிய, இதுவரை வானியல் அறிஞர்களே கண்டிராத மிகப்பெரிய விண்மீனை லண்டனில் உள்ள "ஷெபீல்ட்' வானியல் துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்விண்மீனுக்கு மான்ஸ்டர் ஸ்டார் (ராட்சத நட்சத்திரம்) என்று பெயரிட்டுள்ளனர். இக்கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக தொல் மனிதர்களின் வானியல் கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும். உலகில் உள்ள தொன்மையான மனித இனங்களில் ஒன்றான தமிழினம் தமக்கென வானியல் கொள்கையை சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

பழந்தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும்போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
(பரிபாடல்:2)

இப்பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது. முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

தமிழர் இவ்வுலகிலுள்ள உயிர்கள் நிலைத்து வாழ ஞாயிறே முதன்மைக் காரணம் என்பதை உணர்ந்திருந்தனர். தமிழரின் பொங்கல் திருநாள் ஞாயிறை முதன்மைப்படுத்துவது ஈண்டு நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள், உயிர்கள் மகிழ ஞாயிறு எழுவதாக நக்கீரர் பதிவு செய்கிறார்.

உலக முவப்பு வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
(திருமுருகு:1-3)

இங்கு, உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது. அப்பாடலடிகள் வருமாறு.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு
(நற்:163)

இதன் மூலம், பழந்தமிழர்கள் ஞாயிறை நெருப்புக் கோளம் என்கின்றனர். இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு வடிவமற்று எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்புக் கோளம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய வானியலறிஞர்கள் ஞாயிறை ஒன்பது கோள்கள் சுற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வின் எச்சத்தை சிறுபாணாற்றுப்படையில் காணமுடிகிறது.

வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
(சிறுபாண்: 242-43)

என்னும் வரிகள், ஞாயிறைச் சுற்றிலும் கோள்கள் சூழ்ந்துள்ள உண்மைப் பதிவைப் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் பல கோள்கள் ஞாயிறைச் சுற்றிவந்தன என்று தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பூமியை ஞாயிறின் கோளாக இவர்கள் கண்டறியவில்லை. மாறாக காட்சிப் பார்வையின் அடிப்படையில் பூமியை ஞாயிறும் சந்திரனும் சுற்றுவதாக நம்பினர். இதை,

குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
(பதிற்று: 22:33-34)

இங்கு, ஞாயிறு கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதையும், பூமி நிலையாக ஓரிடத்திலேயே இருப்பதாகவும் காட்சிப் பார்வையின் அடிப்படையில் அறிவியல் உண்மையை அறியாது இருந்த செய்தியும் வெளிப்பட்டு நிற்கிறது.

மேலும், திருப்பாவை 13, புறம்:26:1-2; புறம் 117:1-2; பதிற்றுப்பத்து 13:25-26; ஆகிய பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது.

தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.

சனி, 16 ஜூன், 2018

சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்


     மழை என்பது எல்லா காலங்களிலும் கொடைக்கு உவமையாகவே புலவர்களால் கையாளப்படு வந்துள்ளது. இவ்வுலக உயிர்கள் யாவும் வாழ்வதற்குக் காரணமானது  மழை என்பதை அனைவருக்கும் உணர்வர்.  அதனால்தான் புலவர்கள் மழையைக் கொடைக்கு உவமையாக்கினர். அவ்வாறு உவமைக்காக கூறப்பட்ட பல செய்திகள் இன்றைய வேளாண் அறிவியலோடு ஒத்திருப்பதை ஊன்றிக் கற்போரால் உணரமுடியும். இவ்வாறு மழையை உவமையாகக் கூறுகின்ற அதே நேரத்தில் அம்மழை தோன்றுவதற்கான அறிவியல் காரணத்தையும் பண்டைத் தமிழர்கள் மிகச்  சிறப்பாக அறிந்திருந்தனர். அந்த வகையில் சங்க இலக்கியத்திலுள்ள மழை பற்றிய அறிவியல் செய்திகளை வெளிக்கொணர்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மழையின் சிறப்பு;

     கொடை வள்ளல்களில் சிறந்த இடத்திலுள்ள பாரியின் கொடைத்தன்மையைக் கூறவந்த சுபிலர்.
''மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே''  (புறம் 107)
எனக் கூறிப்பிடுகிறார். வள்ளுவரும் மழையின் சிறப்பை பத்து குறட்பாக்களில் கூறுகிறார். அவற்றில்,

விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது. (குறள் 16)

எனப் புல் வாழ்வதற்குக்கூட மழை மிக இன்றியமையாதது என குறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப்பாரக்கத் தக்கது.

மழையும் அறிவியலும்

     சூரிய வெப்பத்தால் நீரானது நீராவியாக மாறி மேலே சென்று மேகமாக மாறுகிறது. இந்தச் செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போது மேகத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இந்நிலையில் மேகங்கள் காற்றின் போக்கிற்கேற்ப செல்கிறது. இவ்வாறு செல்கிற மேகங்களை மலைகள் தடுக்கின்றன் மலைகளில் காணப்படும் தாவரச் சூழல் காரணமாக அப்பகுதி குளிர்ச்சியாகக் காணப்படுகிறது இதனால் மேகங்களாகக் காணப்படும் நீராவியானது குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றது.
அதேபோல ஒரு இரத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது அங்குள்ள வெப்பமானக் காற்று மேல்நோக்கி செல்கைறது அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கு குளிர்ந்த காற்று வந்து சேர்கின்றது. இவ்வாறு குளிர்க்காற்று வருவதும் மேகங்கள் மழைபொழிவதற்குக் காரணமாகிறது. காடுகள் மிகவும் அதிகாம இருப்பதாலும் சுற்றுசூழல் குளிர்விக்கப் பட்டு மழைப்பெய்கின்றது. இவையாவும் மழை பொழிவிற்கான அறிவியல் காரணங்களாகும்.

இலக்கியமும் மழையும்

     மழை உருவாக்கத்திற்குரிய நீரில் பெரும் பகுதி நீண்டு விரிந்த கடலில் இருந்து பெறப்படுகிறது. ‘’ பெரும்பாகமான தண்ணீர் கடலில் இருந்து சூரியனால் நீராக்கப்படுகிறது. இந்த நீராவியை, பூமியின் காற்று மண்டலத்தில் வீசிக்கொண்டிருக்கும் காற்றோட்டங்கள், நிலப்பரப்புக்கு இழுத்து வருகின்றன’’
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே   (அகம் 183)

என்று குறிப்பிடப்படுகின்றது. பெருங்கடலில் முகந்து கொள்ளப்படும் நீர் ஆவியாகி மேலே செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் நீர் மேகத்தின் அடர்த்தியைப் பொறுத்து அதுமிதந்து செல்லும் உயரம் அமைகிறது.

பெயில் உலர்ந்து எழுந்த பொங்கல் வெண்மழை [நெடு 20]

     அதிக நீர் கொள்ளாத மேகம் மேலே உயர்ந்து செல்கின்றது. அதனால் மேகத்தில் அதிகளவு நீர்த்தன்மை இருக்கின்ற மேகம் உயர்ந்து செல்லாது, தாழ்ந்து செல்வதை,’’ கடுஞ்சூல் மகளிர்’’ போன்று இருப்பதாகக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.
காற்றும் மழையும்

மழைபொழிதலில் காற்றின் பங்கு மிக முக்கியமான இடத்தைப்பெறுகின்றது. நீராவி மேகமாக மாறிய நிலையில் அதனைப் பிற இடங்களுக்கு அடித்துசெல்கின்ற பணியைக் காற்று செல்கிறது. இல்லையெனில் பல பகுதிகளில் மழை இல்லாமல் போய்விடும்.
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே ( ஐங். 492)
எனக்கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது விளக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவக்காற்று காலமே மழைப்பொழிவதற்குரிய காலமாகும். இக்காலத்தில் காற்று வடக்கிலிருந்து வீசுகின்றது அது பருவ சுழற்சியின் காரணத்தாலும் தமிழகம் புவியின்  நடுக்கோட்டின் கீழ் இருப்பதனாலும் கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசுகிறது இதை நன்குணர்ந்த பண்டைத் தமிழர்கள் மேகம் வலமாகச் சுற்றுவதை

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்   (ஐங். 469)
என்றும்
கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)

என்றும் சுட்டப்படுகின்றன. காற்று வலம் நோக்கி செல்வதற்கான காரணத்தை மிகத்தெளிவாக பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது.

நனந்தலை உலகம் வளையி நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை   (முல்லை. 1-2)
என்றும் முல்லைப் பாட்டு குறிப்பிடுகின்றது.

இதனை வலியுறுத்தும் விதமாக
பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ (அகம் 840

எனக் குறிப்பிடுகின்றது. காற்றின் போக்கினை தெளிவாக உணர்ந்திருந்த காரணத்தால் அக்கால தமிழ் மக்கள் கடல் தொழில் செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர். கீழ்காற்று கடல் தொழில் செய்வதற்கு ஏற்றதல்ல என்பதும் இக்காலத்தில் கடலிலிருந்து காற்று கரை நோக்கி  வீசுவதால் பாய்மரத்தின் உதவியால் படகை கடலுக்குள் செலுத்த முடியாது என்பதும் இக்காலம் மழைக்காலம் என்றும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த [ நற். 140]
 
என்று நற்றிணை குறிப்பிடுவதையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்கத் தக்கதாகும்.

மலையும் மழையும்

     காற்றுக்களால் அடித்துச் செல்லப்படும் மேகங்களை மலைகள் தடுக்கின்றன இவ்வாறு தடுக்கப்படும் மேகங்கள் அம்மலைகளில் காணப்படும் தாவரங்களின் குளிர்ச்சியால் நீரின் அடர்த்தி அதிகமாகின்றன. காடுகளில் வளர்ந்திருக்கும் பெருமரங்கள் தாவரங்கள் எல்லாமே அதிகளவு மழை நீரை வேர்களீன் மூலமாக உறிஞ்சுகினறன. ஆனால் மிக குறைந்த அளவு தண்ணீரையே தங்கள் உணவை தயாரிக்க பயன் படுகின்றன. இதனால் தான்  மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.ஏனென்றால் எஞ்சிய பெருமளவு நீர் இலைத்துளைகளின் வழியாக  நீராவியாக காற்று மண்டலத்தில் மீண்டும் செலுத்தப்படுகிறது.இந்த கருத்தை வலியுறுத்தும் விதமாக நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து..(நற்றிணை 289)

இப்பாடல் அடர்த்தி அதிகமாகி மழைப் பொழிவதைக் காட்டுகிறது. அடர்த்தி அதிகரித்தல் என்பதை செறிதக எனும் சொல்லால் சுட்டபடுகிறது. காற்று வீசும் திசைக்கு குறுக்காக உள்ள மலைகள் மழையைத் தடுப்பதை கூர்ந்து கவனித்த புலவர்கள் தங்கள் பாடல்களில் அதனை பதிவு செய்துள்ளனர்.

கருவி வானம் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய .. [பதி. 31]

என்றும்

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து.  (நற்றிணை 261)

என்றும் குறிப்பிடுகின்றன. இதற்கு மருதலையாக மலைகள் மேகங்களை தடுத்து சிகரங்களில் மழையை பெய்விக்கின்றன. இவ்வாறு காற்றினால் தள்ளப்படும் மேகம் மலையில் மழைப் பொழிவதை

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்.. [ பதி . 12]

எனும் பாடல் வரிகள் தெளிவாக விளக்குகின்றன.

சங்க இலக்கியங்கள் என்பவை காலத்தின் பெட்டகங்களாக பண்டை தமிழரின் அழகிய வாழ்வின் அடையாளங்களாக, அறிவியல் சிந்தனைகளின் புதையல்களாகக் காணப்படுகின்றன. அவ்வகையில் மழைக்கான அறிகுறிகளையும் அதற்கானக் காரணங்களையும் பண்டை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை இகட்டுரையின் வழி அறிய முடிகின்றது.


நன்றியோடு - சு.ஆனந்தராசு நம்மண் நிரவாகி தென்புலத்தார்  குழுமம்


கவுரியர் என்ற வாட்சப் குழுவில் 10/06/2018ல் ஒரிசா பாலு அய்யா பகிர்ந்தது