சனி, 22 மே, 2021

பாண்டியரை குறிப்பிடும் குமு இரண்டாம் நூற்றாண்டு ஹாத்திகும்பா காரவேலன் கல்வெட்டு - மூவேந்தர்களின் தமிழ தேச சங்காத்தம் (கூட்டு)

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரவேலாவின் கல்வெட்டு கலிங்க ஒடிசா உதயகிரி குகைகளில் இருக்கிறது.


தமிழக முற்கால வரலாற்றுக்கு முக்கிய ஆவணமாக விளங்குவது இந்தக் காரவேலன் கல்வெட்டு.


பிராகிருத மொழியில் மிகவும் பழமையான கலிங்க பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட 17 வரிகள் கொண்ட ஹாத்திகும்பா கல்வெட்டு ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டை மலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு பாறையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளி, தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் அமைக்கப்பட்டு உள்ளது.


பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக் கோவிலின் முகப்பிலும் எஞ்சியது. அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டை 1825ல் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சமகாலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை (சசிகாந்த்) என்றும் கூறுகிறார்கள்.


இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் காரவேலர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கு இந்தியாவில் பெரும் வலிமை பெற்றிருந்த சாதவாகன அரசன் சதகர்ணியையும் பொருட்படுத்தாமல் கலிங்கத்தின் எல்லையிலிருந்த அவரது நட்பரசர்கள் மீது படையெடுத்ததாகச் சொல்லும் குறிப்பிலிருந்து இந்தக் கல்வெட்டின் வெற்றிப் பட்டியல் தொடங்குகிறது.


ஹாத்திகும்பா கல்வெட்டு சமணர்களின் புனிதமான ‘ணமோகர மந்திரம்’ என்பதன் ஒரு வடிவில் தொடங்குகிறது: (ணமோ அரிஹாந்தணம் [।।] ணமோ ஸவஸித்தாணம் [।।]) இதுவும், காரவேலர் தம்மை அருகர் வழிபாட்டில் பித்துள்ள இல்லறத்தார் என்று குறிப்பிடுவதும் இவர் சமண சமயத்தைப் பின்பற்றியவர் என்பதற்குச் சான்று.


கல்வெட்டின் வரிவடிவம், சொற்களை வைத்து இதன் மொழி பிராகிருதம் என்றும், மகதியோ அர்த்த மாகதியோ அல்ல என்றும் கிட்டத்தட்ட சமஸ்கிருதத்தின் செம்மை வடிவத்தை நெருங்கி, பேச்சு மொழியல்லாமல் எழுத்து மொழியில், சமய நூல்களின் பாலி மொழி வடிவத்துக்கு மிகவும் அணுக்கமான மொழியில் குஜராத் அல்லது மராத்திய மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு சமண முனிவரால் இது எழுதப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது. வரி வடிவங்களைப் பார்க்கும்போது எழுத்துகளின் வடிவங்களில் சில வேறுபாடுகள் தெரிவதால் மூன்று வெவ்வேறு ஆட்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.


பாண்டிய மன்னனிடம் குதிரைகள், யானைகளோடு மாணிக்கங்களையும், முத்து, மணி, ரத்தினங்களையும் திறையாகப் பெற்றார் என்கிறது இக்கல்வெட்டு.


மூவேந்தர்களால் ஆயிரத்து முன்னூறு வருடங்களாக கட்டமைக்கப்பட்டு விளங்கிய கூட்டணியை [தமிர (தமிழ) தேச சங்காத்தத்தை] உடைத்து பாண்டிய தேசம் வரை கைப்பற்றிய இம்மன்னனின் காலம் கிமு 2 லிருந்து கிமு 1 வரை என்று சொல்லப்படுவதால் இன்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்பிருந்தே சேர சோழ பாண்டியர் கூட்டணி இருந்து வடக்கே இருந்து வந்த படையெடுப்புகளிலிருந்து தமிழகம் பாதுகாக்கப்பட்டது புலனாகின்றது.


இதில் குறிப்பிடும் மூசிக நாடு, சங்க கால சேர மன்னனாகிய நன்னன் ஆண்ட எழி(ல்) மலை - இன்றைய வட கேரளத்தின் எழிமலா வாக இருக்கலாம்.


17 வரிகளில் இன்று படிக்கப்படும் காரவேலன் கல்வெட்டின் மொழியாக்கம்


1.அருகர் தாள் போற்றி. சித்தர் தாள் போற்றி. சேதராச மரபின் மாட்சியின் பெருமை, மங்கலகரமான அரசக் குறிகளையும் குணங்களையும் ஒருங்கே பெற்ற, நான்கு திசைகளும் நயக்கும் நற்குணங்களைக் கொண்ட, ஆரிய மாமன்னர், மகாமேகவாகனரின் வழித்தோன்றல், கலிங்காதிபதி, பெரும்புகழ் கொண்ட ஸ்ரீ காரவேலா (எழுதுவித்தது)


2. செவ்வுடலும் பேரெழிலும் பொருந்தியவர், பதினைந்து ஆண்டுகளாக இளைஞர் விளையாட்டுகளில் பயின்று, பின்னர் அரசுப் பேச்சுவார்த்தை, நாணயவியல், கணக்கியல், பொதுச்சட்டவியல் (விவகாரங்கள்), சமயவிதிகள் என்று எல்லாக் கல்வி கேள்விகளிலும் தேர்ச்சி பெற்று, ஒன்பது ஆண்டுகளாகப் பட்டத்து இளவரசராக ஆண்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே பெருவளத்துடன் திகழ்ந்தவர், வேநா சக்ரவர்த்தியைப் போல் பெரும் வெற்றிகளைக் காணப் பிறந்தவர், இருபத்து நான்கு வயது முதிர்ந்த பின்னர்,


3. பருவம் எய்தியவுடன் கலிங்க அரச மரபின் மூன்றாவது வழித்தோன்றல் பேரரசராக முடி சூடிக்கொண்டார். அவர் முடிசூட்டு மங்கல நீராடியவுடனேயே, தம் முதலாம் ஆட்சியாண்டில், புயலினால் சேதமுற்றிருந்த கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், (நகரின்) கட்டிடங்கள் எல்லாவற்றையும் பழுது பார்த்தும், கலிங்க நகரின் கிபிர ரிஷி (பெயரால் அழைக்கப்பட்ட?) ஏரி மற்றும் ஏனைய தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும்


4. முப்பத்து ஐந்து நூறாயிரம் காசுகள் செலவில் மக்கள் மனதைக் குளிரவைத்தார். தம் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் பொருட்படுத்தாமல், மேற்கு மாநிலங்களை நோக்கி வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணை ஆற்றின் (கரும்பெண்ணை அல்லது கிருஷ்ணவேணி ஆறு) கரையை எட்டி மூசிக (ஆசிக?) நகரத்தைக் கலங்க வைத்தார். தம் மூன்றாம் ஆட்சியாண்டில்


5. கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் … இடிபடுவதற்கு முன்னர் …… மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்(?) துண்டாக, கொற்றக்குடைகளும்


6. செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்…… ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கல நீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி


7. நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய்மை அடைந்தார். ….. பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு


8. ராஜகருஹத்துக்கும் (ராஜகிருஹம்) நெருக்கடி கொடுத்தார். மதுரா நகரில் கலக்கத்தோடு பின் வாங்கியிருந்த தம் படைகளையும் வண்டிகளையும் மீட்க வந்த யவன (கிரேக்க) மன்னன் இந்த வீரச்செயல் பற்றிக் கேட்டு அதிர்ச்சியுற்று [சரணடைந்தான்]. மாமன்னர் பெருங்கிளைகளால்


9. கற்பக மரம் நிறைந்து நிற்பது போல் தம்மிடம் நிறைந்து இருந்த யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும், தேரோட்டிகளையும், பாகன்களையும் மாளிகைகளுக்கும், வீடுகளுக்கும், சாவடிகளுக்கும் பெருங்கொடையாக வழங்கினார். போரில் பெற்ற வெற்றிக்குப் பரிகாரமாகப் பிராம்மணர்களுக்கு தீ வேள்வியின்போது வரிகளிலிருந்து விலக்களித்தார். அருகருக்கு


10…………….. (அவர்) முப்பத்து எட்டு நூறாயிரம் (காசு) செலவில் ….. பெருவெற்றி(மகாவிஜய) மாளிகை என்று அழைக்கப்படும் அரசமனை ஒன்றைக் கட்டுவித்தார். தம் பத்தாம் ஆட்சியாண்டில் அமைதி, நட்புறவு, அடக்கு (சாம, பேத, தண்டம்) (என்னும் முக்கோட்பாட்டுக்கு இணங்க) என்பதைப் பின்பற்றி பாரதநாடெங்கும் (பாரதவர்ஷம்) தம் பெரும்படையை அனுப்பிப் பல நாடுகளைத் தோற்கடித்து …… தோற்ற நாடுகளிடமிருந்து மணிகளையும் ரத்தினங்களையும் கைப்பற்றினார்.


11………….. ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைப் பிடித்துக் கழுதைகள் பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுது அழித்தார்; பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு (ஜனபதம்) தொல்லையாக இருந்து வந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முழுதும் உடைத்தார். பன்னிரண்டாம் ஆண்டில் உத்தரபதத்தின் அரசர்களை ஆயிரக்கணக்கான …… வைத்து அச்சுறுத்தி


12 ……………… மகத அரசமனைக்குள்ளே தம் யானைகளை அனுப்பி மகத மக்களை மிரளவைத்து மகதத்தின் மன்னர் பகசதிமிதத்தைத் தன் கால் பணிய வைத்தார். நந்த அரசரால் எடுத்துச் செல்லப்பட்ட ”கலிங்கத்தின் ஜைனர்” என்ற சிலையையும், அதன் அரியணை, ரத்தினங்களையும் மீட்டு …….. (முன்பு கொள்ளையடித்ததற்குப் பரிகாரமாக) அங்கநாடு, மகதநாடுகளின் செல்வங்களையும் (அரச) குடும்ப நகைகளின் காவலர்களையும் கலிங்கத்துக்குக் கொண்டு வந்து ………………


13. (அவர்) பல அற்புதமாகச் செதுக்கிய உள்ளறைகளைக் கொண்ட கூட கோபுரங்களைக் கட்டுவித்து அவற்றைக் கட்டிய நூறு கொத்தனார்களுக்கென ஒரு குடியிருப்பையும் அமைத்து மேலும் அவர்களுக்கு நிலவரிகளிலிருந்தும் விலக்களித்தார். யானைகளை ஓட்டுவதற்கான வியப்புக்குரிய கொட்டங்களை அவர் …. மற்றும் குதிரைகள், யானைகள், ரத்தினங்கள், மாணிக்கங்கள், பாண்டிய அரசனிடமிருந்து எண்ணற்ற முத்து, மணி, ரத்தினங்களை கலிங்கத்திடம் திறை கட்டுமாறு செய்தார்.


14…………….(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்….தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட காரவேலர், பூஜைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள உபாசகர், பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர்.


15…………… சிம்மபத அரசி சிந்துலாவின் வேண்டுகோளை ஏற்று சமணத்துறவிகள் உறைவிடத்துக்கு அருகே மலை மேலிருக்கும் அருகர் சிலைக்கருகே பல யோசனைத் தூரத்திலிருந்து ஒப்பற்ற சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த கற்களால் சமணப்பள்ளிகளைக் கட்டி….


16 …………..இருபத்து ஐந்து நூறாயிரம் (காசு) செலவில்……….பதலிகத்தில்(?)………(அவர்) வைடூரியத்தில் இழைத்த நான்கு தூண்களை நிறுவினார்; (அவர்) மௌரியர்காலத்தில் கைவிடப்பட்டிருந்த ஆயகலைகள் அறுபத்து நான்கையும் தொகுக்கும் பணியை மீண்டும் துவக்கி உடனடியாக ஏழு நூல்களில் தொகுப்பித்தார். அமைதியின் அரசர், செல்வத்தின் அரசர், துறவிகளின் (பிக்குகளின்) அரசர், அறத்தின் (தருமத்தின்) அரசர், வாழ்த்துகளைப் பார்த்தவர், கேட்டவர், உணர்ந்தவர்-


17 ……. வியத்தகு நற்பண்புகளில் முழுமை பெற்றவர், ஒவ்வொரு மக்கட்தொகுதியையும் மதிப்பவர், அனைத்து கோவில்களையும் சீரமைப்பவர், தடுத்தற்கரிய தேரையும் படையையும் கொண்டவர், தமது பேரரசை அதன் தலைவரே (தானே) பேணிக்காப்பவர், அரசமுனிவர் வசுவின் குடும்ப வழி வந்தவர், மிகப்பெரும் வெற்றியாளர், வேந்தர், சிறந்த புகழ்பெற்ற காரவேலர்.


பட்டத்து இளவரசர்களுக்கு ஆட்சிப்பயிற்சி கொடுப்பது பழக்கம் என்பதையும், அந்தப் பயிற்சியில் எதையெல்லாம் கற்பிக்கிறார்கள் என்பதையும் இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. காரவேலருக்குப் பட்டத்தரசி சிம்மபாதத்தின் சிந்துளா (வரி 15), தன் ஏழாம் ஆட்சியாண்டில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்த இல்லத்தரசி வஜிரகரவதி என்று குறைந்தது இரண்டு மனைவியர் இருந்திருக்கிறார்கள்.


---------------------------------------------------------------

https://tamizhini.in/2019/02/17/ /ஹாத்திகும்பா-காரவேலன்-க/

ஹாத்திகும்பா: காரவேலன் கல்வெட்டு

written by கால.சுப்ரமணியம் February 17, 2019


நன்றி: Epigraphy - கல்வெட்டியல் முகநூல் பக்கம்


குறிப்பு: திரு ஒரிசா பாலு ஐயா அவர்களின் சில கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.