திங்கள், 30 நவம்பர், 2020

தமிழர் பெருமையும் பிரபாகரன் வீரமும் ஒப்பீடு

 நன்றி: குமார் அம்பாயிரம்


* கண்ணகிக்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை


கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க 


பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிரங்கி, யானைமீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து


ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து 


கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை நான் கண்டதில்லை. 


* மௌரிய மன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து செருப்பாழி எறிந்த சோழ மாமன்னன் இளஞ்சேட் சென்னியை கண்டதில்லை


* குழந்தை பருவத்திலேயே ஐந்து வீரவேளிர்களை, இரு பேரரசர்களை  எதிர்த்து பெருவெற்றிகொண்டு தோற்றோடியவர்களை அவர்கள் நாட்டிலேயே போய் அழித்து தலையாலங்கானத்து போரில் வரலாற்று வெற்றியை பதிந்த, கடாரம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை கண்டதில்லை. 


*பாரதப்பெரும்போரில் ஓரைவர், ஈரைம்பதின்மருக்கு பெருஞ்சோறு அளித்த சேரப்பேரரசன் பெருஞ்சோற்றுதியனை கண்டதில்லை


*நீதிகாக்க மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதி சோழனை கண்டதில்லை


*சேரநாடே களையிழந்து சோகத்தில் மூழ்கச்செய்த வெண்ணிப் பறந்தலைப்போர், ஒன்பது மன்னர்கள் ஒன்றிணைந்து எதிர்த்த வாகைப்பறந்தலை போர், சேர பாண்டிய மன்னர்கள் ஒன்றிணைந்த வெண்ணிப்போர் 3 இவற்றில் வெற்றிகொண்டு


எதிர்க்க ஆளின்றி தோள்தினவெடுத்து வடதிசை சென்று வச்சிர, மகத, அவந்தி மன்னர்களிடம் திறைகொண்டு ஆரியப்படை வென்று யவனர்களை வென்று இமயத்தில் புலிப்பொறி நாட்டிய சோழமாமன்னன் கரிகால் பெருவளத்தானை கண்டதில்லை


* கடம்பழித்து கடல் நடுவே இருந்த கடம்பரின் சின்னமான கடம்ப மரத்தை அழித்து யவனர்களை அடிபணியவைத்து கடலாதிக்கம் செலுத்திய சேரன் செங்குட்டுவன் கண்டதில்லை


* புள்ளலூர் போரில் புலிகேசியை கொன்ற பல்லவ மாமன்னன் மகேந்திர வர்மனை கண்டதில்லை


* நரசிம்ம பல்லவனுக்காக வாதாபி கொண்டு போர் அழிவை கண்டு அருட்புகழை நாடிய பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டரை (63நாயன்மாரில் ஒருவர்) கண்டதில்லை


* இலங்கையை வெற்றிகொண்ட மாமன்னன் நரசிம்ம பல்லவனை கண்டதில்லை


*இரு கால்களிழந்து உடம்பில் 96 விழுப்புண்களை கொண்டு தன் மகன் மாதண்ட நாயகனாக களம்புகுந்த "திருப்புறம்பியம் போரை" 90 வயதில் நேரடியாகக் காணவந்து பல்லவ- சோழ படை தோற்கும் நிலையில் இரண்டு வீரர்களின் தோள்மீதமர்ந்து கையில் வாளுடன் வெறியாட்டம் ஆடி வெற்றிக்கனி பறித்த மாவீரன் விஜயாலய சோழனை கண்டதில்லை


* காந்தளூர்ச் சாலை முதல் மாலத்தீவு வரை தெற்காசியாவை கட்டியாண்ட பேரரசன் பெருவுடையார் கோவில் கண்ட மாமன்னன் இராசராசனை கண்டதில்லை.


* தன் உடம்பில் 64 விழுப்புண்களை கொண்டு எம் தலைவனே வியந்த பழுவேட்டரையரை கண்டதில்லை


* 12 லட்சம் படைவீரர்களை கொண்டு மாலத்தீவு முதல் இன்றைய பீஜாப்பூர் வரை வென்றெடுத்து தோல்வி காணாத மாமன்னன், தந்தை இராசராசனை விட வீரமகன் கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய இராசேந்திர சோழனை கண்டதில்லை.


சீனம் , பர்மா, காம்போசம், கன்னோசி, கடாரம் முதல் பல நாடுகளில் சுங்கப்பகிர்வு முதல் பல விசயங்களில் நட்புறவு பேணிய குலோத்துங்க சோழனை கண்டதில்லை


ஆனால் இவர்களை இவர்கள் வீரம், ஆளுமை, செருக்கு, குடிகள் மீதான அன்பு, எதிரிக்கும் இரங்கும் நற்பண்புகளை கொண்ட எம் தலைவன் பிரபாகரனை, அவர்களின் தளபதிகளை, தலைவனுக்காக தன் மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களை ஒருங்கே கண்டு அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.


காவிரியில் கல்லணை கட்டி நீரின் போக்கை மாற்றி கால்வாய் வெட்டி விவசாயம் காத்தவன் கரிகால் பெருவளத்தான்.


தன் படை தோற்றாலும் சரி இரணைமடு குளத்தை (அணையை) உடைக்க அனுமதிக்க மாட்டேன், என் மக்களின் விவசாயம் பாதிக்கும் என உறுதியாய் நின்றவன் எம் தலைவன்.


இராசேந்திர சோழனுக்கு பின் அவருக்கு நிகரான எந்த மாவீரனும் அவதரிக்க வில்லை. அதேபோல ஆயிரமாண்டுக்கு பின் எம் தலைவன். இன்னும் ஆயிரமாண்டு கடந்தபின்னும் அவர் புகழ், வீரம் போற்றப்படும்.

 

தமிழன் தலைநிமிர்ந்த நாள்


தலைவன் பிறந்த நாள் ..

நவம்பர்26...

சனி, 21 நவம்பர், 2020

வரலாற்றில் ஆண்டு க்கணக்கு -- சக ஆண்டு

     இப்போதெல்லாம் வரலாற்றை சொல்லஆண்டுக்கணக்காக  கி பி ,கி மு என்று கிறிஸ்துவை அடையாளமாகக்கொண்டு சொல்லுகிறோம் .பெரும்பாலும் இத்தகைய முறையே உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது 


இது கிருஸ்துவுக்குப்பிறகுதான் நடைமுறைக்கு வந்தது .

உலகில் பரவலாக பலரும் கிமு, கிபி என  கிறிஸ்துவ ஆண்டையே பயன்படுத்தி வருகின்றனர். முதன்முதலில் ஒலிம்பிக் நடந்த கிமு 776ஐ கிரேக்கர்கள் தேர்ந்தெடுத்து, கிமு 776லிருந்தும்,  ரோமானியர்கள் கிமு 753ல் இருந்தும் இந்த ஆண்டுக்கணக்கை  தொடங்குகின்றனர். 


முகம்மது நபிகளார் மெக்கா விட்டு மதினா சென்ற அந்த பயணத்தை (கிபி 622) ஹிஜிரா ஆண்டாக முஸ்லிம்கள் கணக்கிடுகின்றனர்


ஆனால் தமிழ் நாட்டின் பண்டைய கல்வெட்டுகளிலும் ,பட்டயங்களிலும் வேறு வகை ஆண்டுக்கணக்குகள் பயன்பாட்டில் இருந்திருப்பதை நாம் காண்கிறோம் .


அவைகள் சக ஆண்டு ,கலியாண்டு ,கொல்லம் ஆண்டு ,விக்கிரம ஆண்டு போல இன்னும் பல பயன்பாட்டில் இருந்திருக்கிறது .அவைகளை பற்றிய செய்திகளையும் ,ஆந்த ஆண்டுக்கணக்கை எப்படி தற்போதைய கி மு ,கி பி க்கு மாற்றுவது என்பதை பார்ப்போம் .


சக ஆண்டு

சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் ஆண்டைக் குறிக்கும்.   என்றும் அழைக்கப்படுகின்ற சாலிவாகனன் என்னும் சாதவாகன மன்னனே அவன் உஜ்ஜயினியின் விக்கிரமாதித்தனுக்கு எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிபி 78 ஆம் ஆண்டில் இம் முறையைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.

பண்டைய கல்வெட்டுகளில் அதிகம் பயன்பாட்டில் உள்ள ஆண்டுமுறை இதுவே ஆகும் .ஏன் இத்தகைய ஆண்டுமுறை தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது ? தங்களுக்காக ஏன் ஒரு தனி ஆண்டுமுறை அப்போது ஆண்ட மன்னர்கள் ஏற்படுத்தவில்லை என்பது கேள்விக்குறிதான் .கௌதமிபுத்ர சதகர்ணி கி.பி. 78-102) சாதவாகனர் அரச வம்சத்தில் 23ஆம் அரசராக திகழ்ந்தார். சதவாகனர்களில் மிகப்பெரும் மன்னராக இருந்த கௌதமிபுத்ரன் தன் தந்தை சதகர்ணிக்கு பின் அரசன் ஆனார்.

கௌதமிபுத்திர சதகர்ணி தன் பேரரசை பெரிதளவில் விரிவடைய வைத்து இரு அஸ்வமேத யாகங்களை நடத்தியவர். இவரது ஆட்சிக் காலத்தில் சகர்கள், கிரேக்கர்கள், மற்றும் பகலவர்கள் சாதவாகனப் பேரரசின் மீது படையெடுப்புகளை முறியடித்து சாதவாகனப் பேரரசை விரிவு படுத்தினார்.

கௌதமிபுத்திர சதகர்ணியின் ஆட்சிப் பகுதியில் தக்கான பீடபூமி, சௌராஷ்டிரம், அவந்தி, இருந்ததாக நாசிக் கற்சிற்பங்கள் எடுத்துரைக்கிறது. மேலும் தென்னிந்தியாவின் காஞ்சியையும் வென்றுள்ளார்.

ஆனால் சதகர்ணிவ்ன்பவர் யார் என்பதில் இன்னமும் நூற்றுவர் யார் என்பதைக்குறித்து சர்ச்சைகள் உண்டு . தமிழ் நாட்டின் அதிக கல்வெட்டுகளில் காலத்தைக்குறிப்பிட சக ஆண்டு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது .எனவே இந்த சக ஆண்டுவரலாறுஅப்போதைய  தமிழ் மக்கள் அறிந்த வரலாறாகவே இருந்திருக்க வேண்டும் .

நமது மன்னர்கள் சக ஆண்டுக்குறிப்புடன் ஓர் அரசன் எந்த ஆண்டு அரசனாக முடி சூடிக் கொண்டானோ அந்த ஆண்டு முதல் அவன் ஆட்சியாண்டு தொடங்குவதாகப் பெரும்பாலும் எழுதுவர்.  ஓர் அரசன் ஐந்தாம் ஆண்டு ஒரு கட்டளை பிறப்பித்து அவனுடைய ஆறாம் ஆண்டில் கல்லில் கல்வெட்டாக வெட்டப்பட்டால் ‘ஐந்தாவதுக்கு எதிராமாண்டு’ என்று எழுதப்படும்.

இத்தகையசக ஆண்டு முறையை இன்றையவழக்கில் உள்ள  கி பி கி மு முறைக்கு மாற்றவேண்டுமானால் அந்த ஆண்டுடன் 78 ஐ கூட்டவேண்டும்

உதாரணமாக சக ஆண்டு 792 ஐ குறிக்கும் கல்வெட்டு ஒன்று இருந்தால்  .அதில் வரகுண பாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .இதை கி பி ஆண்டு முறைக்கு மாற்றும் போது 792+ 78  கி பி 870 என்று கணக்கிடலாம் .

இப்போதே கட்டுரை நீண்டுவிட்டது மீதி ஆண்டு கணக்குகளை அடுத்துப்பார்க்கலாம் .நன்றி !

தொடரும் ......

#அண்ணாமலைசுகுமாரன் 21/11/19

REPOST  21/11/2020

புதன், 18 நவம்பர், 2020

கடலால் வளர்ந்த தமிழர் பண்பாடு !

மூன்று புறமும் கடலால் சூழப்பட்டது நமது இந்தியப்பெருநாடு .


பண்டைய தமிழ்நாட்டுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் என முப்புறமும் கடல்கள் சூழ்ந்திருந்தன. இன்றுள்ள கேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. எனவே, தமிழகத்தின் மூவெல்லையாயும் கடல்களே இருந்தன.   .

வங்காளவிரிகுடா 

அரபிக்கடல் 

இந்திய ப் பெருங்கடல் 

என்றுஅந்தக்கடல்கள்   அழைக்கப்படுகிறது .ஆனால் எத்தனைக்காலமாய இந்தக்கடல்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன .ஏன் இவாறு அழைக்கப்படுகிறது என்பதற்கும் பின்னணியில் வரலாறு இருக்கிறது .


தமிழில் கடலானது 


அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது  


இத்தனை பெயர்கள் இருப்பதில் இருந்தே தொல் தமிழர்களுக்கும் கடலுக்கும் இருந்த நெருங்கியத் தொடர்பை அறியலாம் .


சங்ககாலத்தில் வங்காளவிரிகுடா  குணக்கடல் என்று அழைக்கப்பட்டிருக்கிறது .


கிபி முதல் நூற்றாண்டு இரண்டாம் நூற்றாண்டில் அரபிக்கடல் குடக்கடல் என்று தமிழரால் அழைக்கப்பட்டிருக்கிறது .


தொல் தமிழகத்தில் வணிகம் செய்யவந்த யவனர்கள் இந்திய க்கடலை எரித்திரியக்கடல் என்று அழைத்திருக்கிறார்கள் .


சோழர்கள் தென்கிழக்காசியாவில் முழுவதும் வணிகத்தில் கோலோச்சியபோது வங்காளவிரிகுடாக்கடல் சோழர்கள் கடல் மற்றும் சோழர்கள் ஏரி  என்றே அழைக்கப்பட்டிருக்கிறது .  


பிறகு தென்கிழக்காசியா செல்வது படிப்படியாகக்குறைந்து உள்நாட்டு வணிகத்திற்காக வங்காளத்தின் கங்கை முகத்துவாரத்தில் புகுந்து வாரணாசி ,பாடனா முதலிய உள்நாடுகளில் வணிகம் செய்ததால் ப்பிரும்மபுத்திரா நதிமூலம் வங்காள தேசம் முழுவதும் திபெத் போன்ற இடங்களுக்கு சென்றதும் நடந்திருக்கிறதுஎனவே அது வங்காளக்கடல் என்று அழைக்கப்பட்டிருந்தது போலும் .

 

அதே சமயம் குடக்கடல் எனும் கடல் அரேபியா செல்வதற்கு வழியாக அமைந்ததால் அந்தக்கடல் அரபிக்கடலாக ஆனது போலும் .

வரலாற்றில் அந்தக்கடலுக்கு ரத்தினாகரா என்ற பெயரும் இருந்திருக்கிறது .

அபரா கடல் என்பதே அதன் பெயர். அபரா என்றால் மேற்கு 

நாம் குணக்கடல் குடக்கடல் என்று அழைத்ததைப்போல் வடமொழி இலக்கியங்கள் வங்காளவிரிகுடாவை  பிரச்சிய பயனீதி  prachya payanidhi என்று அழைத்திருக்கின்றன .


வங்காள விரிகுடா என்ற பெயர் ஐரோப்பியர்களால் 17 நூற்றாண்டில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது 


விரிகுடா என்பது நிலப்பரப்பைச் சுற்றி அகல வாக்கில் மிகப்பரந்த அளவில் காணப்படும் கடல் பரப்பாகும்.வளைகுடா என்பது அதற்கு நேர் மாறானதாகும். பெரிய விரிகுடா "வளைகுடா" என்று அழைக்கப்படும்  


இன்னமும் சொல்லப்போனால் கிபி 7 ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா கடல் கலிங்கா சாகர் என்று அழைக்கப்பட்டதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன .

In 1196, according to the Sundarbans copper plate of Srimaddomanapala, there existed close to the Ganga's confluence with the sea, a place named Dvarahataka. It was obviously a small riverine market centre (hataka, ie hattaka) functioning as a dvara or gateway o the sea. These inland riverine market centres/ports, whether in Vanga-Samatata area or in the lower regions of Radha, were less 

prominent than Tamralipta or Samandar, but provided the crucial linkages between the littorals and the interior in a nadimatrka region like Bengal. The navigability of the many rivers, including 

the Ganga, in the Bengal delta is unmistakably evident from the epigraphic account of fleets of boats on the Bhagirathi(sa khaluBhagirathipathapravartamana nauvata) and the description of Vikramapura in Vanga as a navigable tract (Vange Vikramapurabhage 

navye).

Interestingly, nearly 480 km-long coastline of Bay of  actual ancient name of Bay of Bengal was Kalinga Sagar or Kalinga Udadhi or Kalingedro.Similarly, renowned writer Chakradhar Mohapatra has given many hints in support of this in his literary work Swasita. There is also an elaborate description of Kalinga Sagar in ancient Buddhist literature 

written during the 7th-8th century AD.


வங்காள விரிகுடாவிற்கு இன்னொரு தமிழ்ப்பெயர் பூர்வ கடல்.  இன்னமும் இதற்க்கு போர்ச்சுகீசியர்கள் தந்த ஒரு பெயர் வேறு இருக்கிறது .


தொல் தமிழர்களும் கடலும் வரலாற்றுக்காலத்திற்கு முன்பே நெருங்கியது தொடர்பு கொண்டிருந்தனர் .


ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். 


தெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்.. ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. 


இரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும். இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம். 


இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும். 


அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.

பூம்புகார் ஆய்வு இன்னமும் கிடப்பில் உள்ளது .அது வெளிவந்தால் தான்  தமிழர் உண்மைத்தொன்மை வெளியாகும் .


கடல் மூலம் வாணிகத்திற்காக உலகின் பல நாடுகளுக்குச் சென்ற தமிழ்வணிகர்களின் வரலாறு இன்னமும் சரிவர ஆராயப்படவில்லை .


தமிழர்வரலாறு மன்னர்களைவிட வணிகர்கள் மூலமே உலகம் முழுவதும் நிலைபெற்றது ,மீண்டும் அது வணிகத்தின் வெற்றி மூலமே நிலைபெறும் .


சொல்ல சொல்ல இனிக்கிறது சொல்லத்தான் நேரம் கிடைக்கவில்லை .நன்றி!


#அண்ணாமலைசுகுமாரன்  4/6/2020   Repost16/11/2020

படம் இணையத்தில் பெற்றது .

செவ்வாய், 17 நவம்பர், 2020

கண்டா ஓங்கலுக்கு ‘பெலோரஸ் ஜேக்‘ (Pelorus Jack)

// நியூசிலாந்து நாடு இரண்டு பெரிய தீவுகளைக் கொண்ட நாடு. அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை குக் நீரிணை (Cook Strait) என்பார்கள்.




உலகின் மிக ஆபத்தான கடற்பகுதிகளில் இந்த குக் நீரிணையும் ஒன்று. வலிமையான 8 நாட் வரை வேகம் கொண்ட நீரோட்டம், பேரலைகள், கடற்பாறைகள் நிறைந்த பகுதி இது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் பாறையில் மோதி உடைபடவோ, தரைதட்டவோ, உடைந்து நீரில் மூழ்கவோ வாய்ப்புகள் அதிகம்.

குக் நீரிணை என்றாலே கப்பல் மாலுமிகளுக்கு திக்திக் என்று இருந்தநிலையில் அவர்களுக்கு உதவியாக திடீரென ஒருநாள் களத்தில் குதித்தது ஒரு கடலுயிர். அது கண்டா வகை ஓங்கல்.

ஓங்கல்கள் எனப்படும் டால்பின்களில் பலவகைகள் உள்ளன. சீன ஓங்கல் (வெள்ளை ஓங்கல்) (Indo Pacific Humpbacked Dolphin),  கிண்கிணி ஓங்கல், கண்டா ஓங்கல் (Risso), வலவம் ஓங்கல் (Pilot Whale) என ஓங்கல்களில் பலப்பல ரகம்.

இந்தநிலையில் குக் நீரிணைப்பகுதியில் கப்பல்களுக்கு வழிகாட்டியாக ஒரு கண்டா ஓங்கல் 1888ஆம் ஆண்டு திடீரெனத் தோன்றியது. நியூசிலாந்தின் தலைநகரமான வெலிங்டனில் இருந்து தெற்குத் தீவில் உள்ள நெல்சனுக்குப் பயணம் செய்த பிரிண்டில் என்ற கப்பலுக்கு அது வழிகாட்டியது. பாறைகளில் கப்பல் மோதிவிடாமல், சரியான வழியைக் காட்டியபடி கப்பலின் கூடவே அது பாந்தமாக பவனி வந்தது.

ஏறத்தாழ 13 அடி (4 மீட்டர்) நீளமுள்ள ஓங்கல் அது. வெள்ளையில் சாம்பல் நிற வரிகளுடன் காணப்பட்ட அந்த ஓங்கல் ஆணா பெண்ணா என்பது கூட தெரிய வில்லை. ஆனால் கண்டா ஓங்கல்களில் ஆண் ஓங்கல்கள் மட்டுமே 4 மீட்டர் நீளம் வரை வளரும். ஆகவே, இந்த வழிகாட்டி ஓங்கல் ஆண் ஓங்கல்தான் என்ற முடிவுக்கு கப்பல்மாலுமிகள் வந்தார்கள்.

பிரிண்டில் கப்பலுக்கு மட்டுமல்ல, அடுத்த 24 ஆண்டுகளில் நாள்தோறும் இரவும் பகலும் அந்த கண்டா ஓங்கல் அந்த வழியே வரும் அனைத்துக் கப்பல்களுக்கு வழிகாட்ட ஆரம்பித்தது. கட்டணமில்லா சேவை.

அந்த கண்டா ஓங்கலுக்கு ‘பெலோரஸ் ஜேக்‘ (Pelorus Jack) என்று பெயர் சூட்டப்பட்டது. பெலோரஸ் ஜேக் என்பது ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடனத்தின் பெயர். அந்த நடனத்தில் ஆடுபவர்களைப் போலவே நமது கண்டா ஓங்கலும் சுற்றிச்சுழன்று திருநடனம் புரிந்ததால் பெலோரஸ் ஜேக் என்ற பெயர் சூட்டப்பட்டது.

பெலோரஸ் ஜேக், ஒவ்வொரு கப்பலுடன் அரைமணிநேரம் வரை கூடவே வந்து வழிகாட்டும். சிலவேளைகளில் குக் நீரிணைப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் பெலோரஸ் ஜேக்குக்காகவே காத்திருக்கும். சில கப்பல் கேப்டன்கள் பெலோரஸ் ஜேக் வராமல் குக் நீரிணையில் பயணப்பட மாட்டார்கள்.




பெலோரஸ் ஜேக் சிலவேளைகளில் கப்பல்களுடன் 8 கிலோ மீட்டர் தொலைவு வரை கூடவே வரும். கப்பலில் இருந்து எழும் அலைகளில் சறுக்கி விளையாடும். ஆனால், குக் நீரிணையில் உள்ள பிரெஞ்சு பாஸ் என்ற பகுதிக்குள் மட்டும் அது நுழையாது. பிரெஞ்சு பாஸ் பகுதி வந்ததும் நின்று கொள்ளும். அங்கிருந்து திரும்பி வரும் கப்பல்களுக்கு மீண்டும் வழிகாட்டும்.

பெலோரஸ் ஜேக்கின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்க நாளிதழ்களில் அதுபற்றி செய்திகள் குவிந்தன. அஞ்சல்அட்டைகளில் பெலோரஸ் ஜேக்கின் படம் இடம்பெற்றது. பெலோரஸ் ஜேக்கைக் காண சுற்றுலாப்பயணிகள் நியூசிலாந்தில் குவியத் தொடங்கினர்.

ஒருமுறை பெங்குவின் என்ற பயணிகள் கப்பலைச் சேர்ந்த குடிகார மாலுமி ஒருவர் பெலோரஸ் ஜேக் ஓங்கலைக் கண்டு கடுப்பாகி, கப்பலின் மேற்தளத்தில் இருந்து அதை துப்பாக்கியால் சுட்டார். நல்லவேளை, பெலோரஸ் ஜேக் நீரில் மூழ்கி தப்பி விட்டது. அந்த குடிகார மாலுமியை மடக்கிப்பிடித்த சுற்றுலாப்பயணிகள் கரை வந்து சேர்ந்ததும் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்த தகவல் இதற்குள் காட்டுத்தீயாகப் பரவ, நியூசிலாந்து நாட்டு நாடாளுமன்றம் கூடி, பெலோரஸ் ஜேக் ஓங்கலைக் காப்பாற்ற சட்டம் பிறப்பித்தது. அந்த ஓங்கல் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் 100 பவுண்ட் வரை தண்டம் என்று அரசு அறிவித்தது. உலக அளவில் தனியொரு கடலுயிரை பாதுகாக்க ஒரு நாட்டின் நாடாளுமன்றம் சட்டம் பிறப்பித்தது அதுவே முதல்முறை.

இதற்கிடையே இன்னொரு வியப்பூட்டும் சங்கதி நடைபெற்றது. குக் நீரிணைக்குவரும் அனைத்துக் கப்பல்களுக்கும் வழிகாட்டி வந்த பெலோரஸ் ஜேக், தன்னைச் சுட முயன்ற கப்பலான பெங்குவினுக்கு மட்டும் அதன்பிறகு வழிகாட்டவேயில்லை. இந்தநிலையில் ஒருநாள் குக் நீரிணைப் பகுதியில் கடற்பாறையில் மோதி பெங்குவின் கப்பல் உடைந்தது. அதில் 75 பேர் வரை பலியானார்கள்.

இதற்கிடையே பெலோரஸ் ஜேக்குக்கு வயதாகத் தொடங்கியது. கண்டா ஓங்கல்கள் 24 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. இந்தநிலையில், 24 ஆண்டுகள் இடைவிடாமல் வழிகாட்டி பணிபுரிந்த பெலோரஸ் ஜேக், அதன் ஓய்வு வயதை எட்டத் தொடங்கியது.
வயதாகி விட்டதால் அதன் வேகம் குறையத் தொடங்கியது. அதற்கேற்ப நீராவிக் கப்பல்களும் பெலோரஸ் ஜேக்குக்கு ஏற்ப தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அதை பின்தொடர ஆரம்பித்தன.

இதற்கிடையே தனது பணி தனக்குப்பிறகும் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக நாய்ச்சுறா ஒன்றுடன் பெலோரஸ் ஜேக் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு அந்த நாய்ச்சுறாவை தனக்கு மாற்றாக களமிறக்க முயன்றதாகக்கூட ஒரு கதை உண்டு.
எது எப்படியோ? கடைசியாக 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெலோரஸ் ஜேக் ஒரு கப்பல் மாலுமியின் கண்ணில் பட்டது. அதன்பிறகு அதைக் காணவில்லை. 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குக் நீரிணைப்பகுதியில் நங்கூரமிட்டு நின்ற நார்வே நாட்டு திமிங்கில வேட்டைக்கப்பல் ஒன்று பெலோரஸ் ஜேக்கை வேட்டையாடி விட்டதாக நம்பப்பட்டது.

ஆனால், குக் நீரிணை பகுதியில் கடலோர விளக்குகளை பராமரித்து வந்த சார்லி மொய்லர் என்பவர் பெலோரஸ் ஜேக் போன்ற ஒரு கண்டா ஓங்கல் இறந்து கரை ஒதுங்கியதாகக் கூறினார். அந்த ஓங்கலின் உடல் துணுக்குகளை ஆய்வு செய்ததில் அது 24 முதல் 30 வயதான ஓங்கல் எனத் தெரிய வந்தது. அது பெலோரஸ் ஜேக்கின் உடல்தான். முதுமை காரணமாக பெலோரஸ் ஜேக் இயற்கை மரணம் அடைந்து விட்டது என கருதப்பட்டது.

உலக அளவில் பெலோரஸ் ஜேக்கைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றப்பட்டன. ஒரு சாக்லெட்டுக்கு பெலோரஸ் ஜேக்கின் பெயர் சூட்டப்பட்டது. நியூசிலாந்தில் பெலோரஸ் ஜேக்கின் மிகப்பெரிய வெண்கலசிலை நிறுவப்பட்டது.

இதற்கிடையே பெலோரஸ் ஜேக்கை பிடிக்காத சிலரும் அப்போது இருந்தார்கள். ‘பெலோரஸ் ஜேக் ஒன்றும் கப்பல்களுக்கு வழிகாட்டவில்லை. அது கப்பல்களால் உருவாகும் அலைகளைப் பயன்படுத்தி அலைச்சறுக்கு செய்யத்தான் கப்பல்களுடன் பயணித்தது‘  என்பது அவர்களது கருத்தாக இருந்த து.

எது எப்படியோ? பெலோரஸ் ஜேக் இருந்த வரை, குக் நீரிணைப் பகுதியில் அது வழிகாட்டிய எந்த ஒரு கப்பலும் விபத்தில் சிக்கவில்லை.//

(நன்றி : Stephen Deli, உவரி)

திங்கள், 16 நவம்பர், 2020

தமிழர் பண்பாட்டில் பழங்காலம் தொட்டே பொன் நகைகளுக்குத் தனி இடம் உண்டு அவை

 புன்சிரிப்பு முகத்திற்கு அழகு என்பர். குமிழ்வாயின் புன்சிரிப்பு எனும் அலங்கார உவமை வரி இலக்கியங்களில் உண்டு. புன்சிரிப்பு என்கிற புன்னகையுடன் பொன் நகையும் சேர்ந்தால் அழகு. அது பெண்களின் அழகுக்கு அழகூட்டும் என்பர். தமிழர் பண்பாட்டில் பழங்காலம் தொட்டே பொன் நகைகளுக்குத் தனி இடம் உண்டு. 





தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி எனும் ஐந்தும் அணிகளின் அதாவது நகைகளின் பெயரையே கொண்டிருக்கின்றன. 

சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி 

மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி 

குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். 

வளையாபதி - வளையல் அணிந்த பெண் 

சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் கிரீடத்தில் பதிக்கப்படும் மணிக்கல். 


இப்படி தமிழ்பண்பாட்டிலிருந்து பிரிக்க முடியாத இந்த நகைகளை அணிந்து மகிழ்ந்த மனிதன் அதை தான் வணங்கும் தெய்வங்களுக்கும் சூட்டி மகிழ்ந்தான். கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் நகைகளின் பெயர்களை ஏராளமாக நாம் காண முடிகிறது. அவற்றில் பல இன்று நாம் அணியும் வழக்கத்திலிருந்தே காணாமல் போய்விட்டன. நமது பழம் பண்பாட்டில் இருந்து வந்த சில நகைகளின் பெயர் பட்டியல் இதோ:


ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை]

காறை [கழுத்து அணி ]

கச்சோலம் [ இடை அணி]

கலாவம் [இடை அணி]

காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி]

மோதிரம் [இரத்தினம் முத்து ]

முத்து மாத்திரை [காது அணி]

பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ]

பதக்கம். 

காந்திகை ( கழுத்து அணி)

கடகம்,

கொப்பு ( காதணி)

மகுடம், 

குதம்பை ( காதணி)

பட்டம் (மகுடம்)

பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)

சப்தசரி ( ஏழு சங்கிலிகள்)

சிடுக்கு, சூடகம் (வளையல்)

பாத சாயலம் ( கால் அணி)

சூரி சுட்டி (நெற்றியில் அணிவது)

வீரப்பட்டம் (தலையில் அணிவது)

வாளி (காதணி)

காறை கம்பி (காதணி)

திருகு, மகரம் (காதணி)

உருட்டு திரிசரம் ( கழுத்து அணி)

தூக்கம் (காதணி)

நயனம் (கண்மூடி)

பொற்பூ,

பொட்டு.

பாசமாலை

தோள் வளை

தாலி

தாலி மணிவடம் 

புலிப்பல் தாலி

தாழ்வடம்

தகடு

திரள்மணி வடம்

வளையல்

வடுக வாளி

வடம்

தோடு

திருவடிக்காறை

கால் வடம்

கால் மோதிரம்

சன்ன வடம் திருகு

கால் காறை

கைக் காறை மாலை

பாம்படம்

தண்டட்டி 


இப்படி இன்னும் எத்தனையோ.....

இந்த நகைகளில் பதிக்கப்பட்ட நவமணிகளின் வகைகள் முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும் வைரங்களில் 11ம் இருந்தன என்று தெரியவருகிறது. நெல்லை வெள்ளூவன்