வியாழன், 23 ஏப்ரல், 2020

இந்தச் சொல்லுக்கு ஏன் இந்தப் பொருள் ? (துணுக்கு விளக்கம்)

இரா. திருமாவளவன்

 0. அம்மான்> மாமன் = அம்மா அல்லது அம்மையின் உடன் பிறந்தவர்
 0. அத்தை > அத்தன் = அப்பா/ தந்தை >> தந்தையின் உடன்பிறந்தவள் ( அம்மை > அம்மான்/ அத்தன்> அத்தை)
 0. மருமகன்> குடும்பத்திற்குப் பொருந்திய மகன் ( மருவிய மகன்) மகளின் கணவன்
 0. மருமகள்> குடும்பத்திற்குப் பொருந்திய மகள் ( மருவிய மகள் ) >> மகனின் மனைவி
 0. மாமன் > மருவிய அம்மான்
 0. மாமி > மாமன் மனைவி
 0. அண்ணன் > தமக்கும் மேலான அகவையுடைய உடன் பிறந்தான். அண் = மேல்
 0. தம்பி = தமக்குப் பின்னால் பிறந்தவன் >> தம் பின்> தம்பின்> தம்பி
 0. தங்கை > தம் பின் பிறந்த சிறியவள் , இளைவள் ( கை = சிறிய) >>> தம் + கை = தங்கை
 0. தா > கையை முன்னே தள்ளி, நீட்டிப் பெறுவது / கொடுப்பது( முன் தள்ளல் பொருள்) 
 0. மா = பெரிய , உல்> முல்> மல் = திரட்சிப் பொருள், திரண்டது பருக்கும். உல்> முல்> முழு > முகு > மிகு, முகு> மகு > மகம்= பருமை , மகம் >மக> மா, ( மகன்> மான் எனத் திரிதல் போல்) மா = பெருமை, பருமை
 0. மாரி > கரிய மழை முகிலிலிருந்து பொழியும் மழை ( உல் = கருமை பொருள் வேர். உல்>முல்>மல்>மால்= கரிய முகில், மால்>மார்> மாரி)
 0. மயிர் > கரிய தலை முடி ( உல்>முல்>மல்>மய்>மை = கண்ணுக்குப் பூசும் கருமை நிறம்; மய்>மயிர் )
 0. அயிர் > நுண்ணிய மணல் ( உல்>அல்= நுண்மைப் பொருள் வேர். உல்>அல்>அய்>அயிர் )
 0. நிலா > ஒளி வீசும் துணைக்கோள் ( உல்>நுல்= ஒளிப் பொருள் வேர். உல்>நுல்> நில்>நிலா, நில்>நிலவு )
 0. காரி >கரிய படலம் சூழ்ந்த கோள். ( உல்>குல்= கருமைப் பொருள் வேர். உல்>குல்>கல்>கர்>கரி>காரி. < கல்>கலி>சனி ~ வடமொழித் திரிபு)
 0. கரி > கரிய நிற யானை ( உல்>குல்>கல்>கரி)
 0. சாவு > உயிரற்று உடல் சாய்தல் நிலை. ( உல்>சுல்= வளைவு பொருள் வேர். உல்>சுல்>சல்>சால்>சாய்>சாய்வு>சாவு.  சாவு >சா= இறப்பு)
 0. சூரியன்> சுரீர் எனக் குத்தும் வெப்ப ஒளி வீசும் கோள். உல்>சுல்>சுர்>சுரீர். சுர்>சூர்>சூரி> சூரியன்)
 0. பூனை > கால்களால் அடிக்கடி தன் முகத்தைத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் விலங்கு. ( பூசு>பூசை > பூனை . )
 0. உழவு> நிலத்தைக் குத்திக் கிளறி பயிர் செய்தல்( உல்> துளைத்தல் பொருள் வேர். உல்>உழ்>உழு>உழவு)
 0. வா> சென்று மீண்டும் திரும்புகை. அள்>வள்= வளைதல் கருத்து வேர். வள்>வர்>வரு> வருகை. வள்>வர்>வார்> வா = வளைந்து வருதல்)
 0. முள்ளம் பழம்> முள் நிறைந்த பழம். ~ டுரியான். ( உல்= கூர்மை பொருள் வேர். உல்>முல்>முள்> முள்+அம்= முள்ளம்)
 0. புரை > துளை, உல்= துளைத்தல் கருத்து, உல்>புல்> புர்>புரை ( புரை bore)
 0. புல்> மூங்கில் ( உள்ளே துளை உள்ளது) உல்> புல்=>துளை
 0. புல்லாங்குழல்> புல் + ஆம் + குழல்= மூங்கிலால் செய்யப்பட்ட குழல்
 0. குழல்> உள் துளையுடைய தூம்பு. உல்>குல்> துளைத்தல் பொருள் வேர். குல்> குழ்>குழல்
 0. தூம்பு> உள் துளையுடைய குழாய். உல்>துள்>தும்>தும்பு>தூம்பு( tube)
 0. சுழியம்> வெறுமை வட்ட அடையாளம்; zero, உல்>சுல்= வளைவுப் பொருள் வேர், சுல்>சுழ்>சுழி>சுழியம்
 0. சிவம்> சிவப்பு நிற இயற்கைத் தீயின் நிறத்தன்மை, உல்> வெப்பக் கருத்து வேர், உல்>சுல்>செல்>செம்> செம்மை>செவ்வை>செவ்வம்>சிவ்வம்>சிவம்
 0. சிவப்பு> தீயின் நிறம், சுல்>செல்>செம்>செம்மை> செவ்வை> சிவ்வை>சிவம்>சிவப்பு.
 0. சிவப்பு>சிகப்பு ( வ> க திரிபு முறை)
 0. சேய்> செந்நிறம், சுல்>செல்>சேல்>சேய்
 0. சேயோன்> செந்நிறக் கதிரவன், சுல்>செல்>சேல்>சேய்> சேயோன்
 0. சொலிப்பு> ஒளிர் விடுதல், சுல்>சொல்>சொலிப்பு
 0. முருகன் > இளமை வடிவினன். உல்> தோன்றல் கருத்து வேர். தோன்றுவது இளமையாகி இளமைக் கருத்தைத் தரும். உல்>முல்>முள்>முரு>முருகு= இளமை. முருகு>முருகன் = இளமையன்
 0. குமரன்> இளமையானவன். உல்>கும்>குமரன். ( கும்= திரட்சிப் பொருள் வேர். இளமையானது  வலிவுடையதாய் விளங்கும்)
 0. குமரி > உருண்டு திரண்டு வலிவுற்று விளங்கும் இளம்பெண். உல்>குல்>கும்>குமரி.
 0. உயரம் > மேல் நோக்கி முன் இயங்கியிருப்பது. உல்> முன்செலல் கருத்து வேர். உல்>உய்>உயர்>உயரம்.
 0. உயிர்> முன்னோக்கி  உந்தி இயங்கிக்கொண்டிருப்பது. உல்>உய்>உயிர். உயிருடைய ஒன்று இயங்கும் வளரும்.
 0. காளான்> கரிய நிறமுடைய பூக்காத் திணை. உல்>கல்= கருமை கருத்து வேர். உல்>குல்>கல்>கள்>காள்>காளான்
 0. காளி> வெப்பம் மிகுந்த கரிய வறண்ட பாலைத் திணை இயற்கைத் தன்மை. உல்>குள்>கள்>காள்>காளி.
 0. அந்தணன்> அகத்தைத் தணித்தவன். ஆசை வெறிகொண்டைலையாது அடங்கி இருப்பவர். அகம் + தணன்> அம்+ தணன் = அந்தணன். அகம்> அம்.
 0. ஆல மரம் > அகன்று விரிந்த மரம். அகல்> ஆல். அகலம்>ஆலம். அகல மரம் > ஆல மரம்.
 0. தென்னை மரம்> வளைந்த மரம். உல்> துள்> வளைவு பொருள் வேர். உல்>துல்>தெல்>தென்> தென்னு = வளைவு . தென்>தென்னை= ஓங்கி உயர்ந்து வளைந்த மரம்
 0. மேற்கு > மேல் நோக்கிய மலையுள்ள திசை. உல்>முல்>மேல்> மேற்கு.
 0. கிழக்கு> மேற்கின் எதிர்புறமாய் கீழ்நோக்கிய திசை. உல்>குல்> தாழ்வு, படுப்பு பொருள் வேர். உல்>குல்>கீழ்>கீழ்க்கு> கிழக்கு.
 0. மண்> சேர்ந்திருப்பது. உல் = சேர்தல் கருத்து வேர். உல்>முல்>முள்>முண்>மண்.
 0. மணம்> பொருந்திய , இசைந்த வாசனை, இரு உள்ளங்கள் பொருந்திய கலியாணம். திருமணம். உல்>முள்>முண்>மண்.
 0. கலகம்> எதிரிகள் சேர்ந்து பொருதுவது. கைகலப்பது. உல்> சேர்தல் கருத்து வேர். உல்>குல்>கல்>கலவு> கலகம்
 0. கலாம்> கலகம். உல்>குல்>கல்>கலாம்
 0. போர்> இரு நாடுகள் சேர்ந்து பொருதுவது. உல்>புல்>பொல்> பொர்> போர்( war)
 0. களவு> மறைந்து செய்யும் திருடு. உல்> குல்> குள்>கள்= கருமை கருத்து வேர். கருமை>> இருட்டு. இருட்டில் ஒளி இல்லாததால் உரு மறையும். இவ்வாறு உருமறைந்து யாருக்கும் தெரியாமல் செய்யும் திருடு. குள்>கள்>களவு.
 0. கள்ளம்> உள்ளத்துள் மறைவாய் கிடக்கும் தீய உணர்வு. உல்> குல்>குள்>கள்>கள்ளம்.
 0. கரவு > கரிய நிறம் மறைவுணர்வுக்குக் குறியீடாகி மறைவான தீய எண்ணத்திற்கு ஆகி வந்து கரவானது. கரவு> மறைவான தீய எண்ணம். உல்>குல்>கல்>கர்>கரி> கரவு
 0. காயம்> கரியதான வானம். உல்>குல்>கல்>கய்>காய்>காயம். ( ஆகாயம்> ஆகாசம்( வடமொழி )
 0. வெப்பம் > சூடு. சூரிய ஒளி வெண்மை நிறமாகவும் இருத்தலால் வெள்ளை சூட்டுக்கும் ஆகி வந்தது. உல்> முல்>மில்> விள்> வெள்> வெய்> வெய்ம்மை> வெம்மை. வெம்பு>வெப்பு> வெப்பம்.
 0. கரம்> கடும் வெயிலில் உழவு தொழில் செய்தமையால் கருத்த கை. உல்>குல்>கல்>கர்>கரம்
 0. குளம்> நிலத்தில் குடைவாய் கிடக்கும் தாழ்பகுதியில் தேங்கும் நீர் நிலை. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்> குளம்
 0. அடுப்பு > சமையல் செய்வதற்கு உணவைச் சூடேற்றும் கருவி. உல்> சேர்தல் , தொடுதல், பொருந்துதல் கருத்து வேர். சேர்வது தேயும் தேய்வது சூடேறும் சூடேறியது தீயாகும், குத்தும் எரிக்கும் ; கருக்கும் . உல்> அல்> அள் = கூர்மை, வெப்பக் கிளைக் கருத்து. அள்> அட்டு=  வெப்பம். அள்>அடு = சேர்தல், மோதல், >> மோதுவது வெப்பமாவதால் வெப்பப் பொருளுமாகியது. அள்> அடு = அடுப்பு .
 0. அட்டை = சேர்ந்து அடுக்கப்பட்டு திண்மையாகிய தாள். உடலில் ஒட்டி குருதி உறிஞ்சும் உயிரி. உல்= சேர்தல் கருத்து வேர், உல்> அல்>அள்> அடு > அட்டு > அட்டை.
 0. பசை > ஒட்டி இரு பொருள்களைச் சேரச்செய்யும் பொருள். உல்> சேர்தல், பொருந்தல் கருத்து வேர். உல்> புல்= சேர்தல், பொருந்துதல் ; உல்>புல்>பல்> பய்> பயை>பசை.
 0. பற்று > சேர்தல், ஒட்டுதல். தொற்றுதல்; உல்>புல்>பல்> பற்று ( பற்று > பற்றி> பத்தி)
 0. பல்லி> சுவரில் , நிலத்தில் பற்றி நகரும் உயிரி. உல்> புல்>பல்> பல்லி
 0. உடை > உடலில் ஒட்டி ஏற்றவாறு பொருந்த அணியும் ஆடை. உல்> சேர்தல் கருத்து வேர். உல்> உள்> உடு> உடை.
 0. உடுப்பு > உல் = சேர்தல் கருத்து வேர். உல்>உள்> உடு> உடுப்பு
 0. உடும்பு > சுவரை உறுதியாய்ப் பற்றிப் பிடித்து நகரும் உயிரி. உல்> உடு> உடும்பு
 0. ஊர்> மக்கள் சேர்ந்து பொருந்தி வாழும் இடம். உல்> உர்> ஊர்.
 0. ஊர்வன> நிலத்தோடு பொருந்தி ஒட்டி நகரும் உயிரிகள். உல்> உர்> ஊர்> ஊர்வன.
 0. உறைவிடம்> மக்கள் சேர்ந்து பொருந்தி வாழும் இடம். உல்> உர்> உறு > உறை > உறைவு > உறைவு இடம் > உறைவிடம்
 0. உறவு > பொருந்திய சேர்ந்த ஒட்டிய தொடர்பு. உல்> உர்> உறு > உறவு
 0. உறவினர் > ஒட்டிய தொடர்பினர். உல்> உறு>உறவு>உறவினர்
 0. தொடர்பு > ஒட்டிச் சேர்ந்திருக்கும் உறவு. உல்> துல்> துள்> தொள்> தொடு > தொடர்> தொடர்பு
 0. தொடரி > ஒட்டிச் சேர்ந்து நீட்சிபடும் பொருள். ( சங்கிலி) உல்> துல்> துள்>தொள்>தொடர்> தொடரி
 0. தொடை > இடுப்போடு காலை சேர்த்துத் தொடுத்திருப்பது/ பாக்களில் சீர்களையும் அடிகளையும் இணைப்பது. உல்> துள்>தொள்> தொடு>தொடை
 0. தொடுப்பு > கள்ள உறவு / தொடர்பு . உல்> தொள்> தொடு > தொடுப்பு
 0. தொடலை > பூக்களால் இணைக்கப்பெற்ற மாலை . உல்> தொள்> தொடு > தொடல்> தொடலை
 0. நடு > உள்ளே அளவாய்ப் பொதிந்த பகுதி/ புள்ளி. உல் > துளைத்தல் கருத்து. உல்> உள்> நுள்> நள்> நடு.
 0. நள்ளிரவு > நடு இரவு ( இரவு 12 மணி) உல்>துளைத்தல் கருத்து. உல்> உள்> நுள்>நள்= நடு. நள்> நள்ளிரவு
 0. நண்பகல்> நடுப்பகல்.  உல்>துளைத்தல் கருத்து . உல்> நுள்> நள்> நண்பகல்.
 0. உள்ளங்கை = கையின் உட்பகுதியாய் விளங்கும் நடுப்பகுதி.உல்>துளைத்தல் கருத்து     உல்> உள்>உள்ளம்> உள்ளங்கை.
 0. அகம்> உட்குடைவாய் உள்ள வீடு. உள் பொதிந்த உள்ளம். உல்> அல்>அகு> அகம். நடுவிடம்.
 0. அங்கை > உள்ளங்கை. அகம்= உள்பொதிந்ததால் அளவுற்று நடுவிடமானது. உல்> அல்>அகு>அகம்> அகம் கை> அகங்கை> அகம்>> அம் எனத் திரிந்து அங்கை ஆனது.
 0. நயன்> நடுவானத் தன்மை. நயன்மை. உல்>நுல்>நல்> நய்> நயன். ( நயன்> நயம்> நியம்> நியாயம்> ஞாயம்>> வடமொழி) நயன்> நயன்மை ( தமிழ்) நியாயம்/ ஞாயம் ( வடத்திரிபு)
 0. பேய்> பே எனும் அச்சக் குறிப்பு. பேபே.. என விழித்தல். அச்சத்தால் ஆக்கிக் கொண்ட உருவகம். பே>பேய்
 0. பேதை> பே அச்சக் குறிப்பு. பே> பேது= அறியாமை, பே>பேது>பேதை = அறியாமை உடையவர்.
 0. பேதலிப்பு > அறியாமையாலும் அச்சத்தாலும் நிலைத் தடுமாறல். பே> பேது > பேதலிப்பு
 0. பேக்கு> பே= அச்சக் குறிப்பு. அச்சத்தால் அறியாமை உண்டாகும். அத்தகு அறியாமை பேக்கு என்னப்பட்டது.
 0. பேக்கான் > பே>பேக்கு> பேக்கான். அச்சத்தின் நிமித்தமாய் அறியாமையுற்று அறிவு முடமான ஆள்
 0. பேமானி> பே>பேமானி அறிவு குன்றிய மாந்தன்
 0. அரத்தம்> சிவப்பு நிறத்திலான குருதி. உல்> சேர்தல் கருத்து வேர். சேர்ந்தது உராசும், குத்தும், துளைக்கும். வெப்பம் உருவாகுதற்கு இவ்வினை இன்றியமையாதது . இதனால் உல்> எரிதல் கருத்தாகியது. உல்>அல்>அர்= எரிவது செந்நிறமாதலால் சிவப்பு நிறக் கருத்தாயிற்று. அர்>அரம்> சிவப்பு நிறம். அர்>அரம்> அரத்தம் = சிவப்பு நிறக் குருதி.
 0. அரம்பம்> அறுக்கும் கருவி. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>உர்>அர் = துளைப்பது பொருள்களை வெட்டும், பகுக்கும், துளையிடும். அர் > பொருள்களை வெட்டும் கருத்துக் கிளைக் கருத்து வேர். அர்> அரம் = பொருள்களை அராவி வெட்டும், தீட்டும் கருவி. அர்>அரம்>அரம்பம் = பொருள்களை அறுக்கும் கருவி.
 0. அரிமா = கூரிய நகங்களாலும் , பற்களாலும் ஏனைய உயிரினங்களைக் குத்திக் குதறிக் கொல்லும் விலங்கு. உல் > துளைத்தல் கருத்து வேர். உல்> உர்>அர்> அரி > அரிமா
 0. அரன் > செந்நிறமான சிவன். உல்= எரிதல் கருத்து வேர். எரிவது சிவக்கும். சிவந்தவன் சிவன். உல்>உர்>அர் > செந்நிறக் கருத்து. அர்> அரன் = செந்நிறமான சிவன்.
 0. உடன்> சேர்ந்திருத்தல், இணைந்திருத்தல் பொருளைத் தரும் வேற்றுமை உருபு. உல் > சேர்தல் கருத்து வேர். உல்> உள் > உடு> உடன்.
 0. ஓடு > இணைந்திருத்தல் வேற்றுமை உருபு. உள்>சேர்தல்  , பொருந்துதல் கருத்து வேர். உல்> உள்> ஒள்> ஒடு> ஓடு.
 0. கண்> பக்கம், இடம், நெருங்கல் எனும் பொருள் தரும் வேற்றுமை உருபு. உல்> கூடல், நெருங்கல் கருத்து வேர். உல்> குல்> குள்> கள்> கண் . “அவன்கண் கொடு”
 0. பால்> பக்கம் எனும் பொருளை உணர்த்தும் சொல் . வேற்றுமை உருபு. உல்> பொருந்துதல், நெருங்கல், சேர்தல், துளைத்தல் கருத்து வேர். உல்>புல்> துளைத்தல் கருத்து. புல்> புகு> பகு>பகல்> பால் = பகுப்பு. பகுக்கப் பட்டது பகுதியாகும். ஒன்றாக இருந்தது பகுக்கப்பட்டதாயினும் அருகே இருப்பதால் பக்கம் , அருகு எனும் பொருளைத் தந்தது. அவன் பால் கொடு  எனின் அவனிடத்து நெருங்கிக் கொடு எனவாகும்.
 0. ஐ > பக்கம், சேர்தல், உயர்வு, நுட்பம் முதலானப் பொருளைத் தரும். இரண்டாம் வேற்றுமை உருபு. உல்> அல் = நெருங்கல் கருத்து வேர். உல்>அல்>அய்> ஐ = சார்ந்த பொருள் தரும் வேற்றுமை உருபு. “மரத்தை வெட்டினான்”. ( மரத்தைச் சார்ந்தால்தான் , பொருந்தினால்தான் வெட்ட முடியும்.
 0. கு = சேர்தல் பொருள் நான்காம் வேற்றுமை உருபு. உல்> குல் = சேர்தல், பொருந்துதல், நெருங்கல். உல்>குல்> கு... ஈறு மறைந்து வேற்றுமை உருபானது. வீட்டுக்குச் சென்றான்.
 0. அது > உடமைப் பொருள் வேற்றுமை உருபு. ஒருமையைக் குறித்தது. உல்> சேர்தல் பொருள் வேர். உல்> அல்>அது. அவனது புத்தகம்.
 0. கள் > பன்மை பொருள் சாரியை. உல்> சேர்தல் , கூடல் கருத்து தரும் வேர். உல்>குல்>குள்>கள் = பன்மை விகுதி. சேர்ந்தன; அதிகரிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்டு கூடுவன. படங்கள் , வீடுகள் .
 0. கணம் > கூட்டத் தொகுதி. உல்> சேர்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>கள்>கண்>கணம். சிவகணம். தூக்கணங் குருவி. தொங்கும் வகையில் தொகுதியாகக் கூடு கட்டும் குருவி.
 0. கணக்கு > எண்களைக் கூட்டியும் பெருக்கியும் செய்யும் எண்ணியம். உல்>குல்= சேர்தல், கூட்டல் கருத்து. உல்>குல்>கல்>கள்>கண்>கணம்>கணக்கு.
 0. கடம் > உள் குடைவாக உள்ள குடம் போன்ற தாளக் கருவி. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்> கள்>கடு>கடம். உள் குடைந்து துளைத்தக் குடம்.
 0. குடம்> உள் குடைவாக உள்ள மட்பானை. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>குடு>குடம்.  ( உல்>குள்>குடு>குடுவை)
 0. மாத்திரை > கால அளவு. உல்> பொருந்துதல் கருத்து வேர். உல்>முல்> முத்து. பொருந்துதல். முத்து> மத்து= பொருந்தி, தேய்த்துக் கடையும் கோல். உல்>மல்> மால்>மாத்தல்= பொருத்தி ஒப்பிட்டு அளத்தல். பொருத்தமுற மதிப்பிடல். மால்>மா> மாத்திரை = காலத்தை பொருத்தமுற மதிப்பிடல்.
 0. மதி > காலத்தை அளக்கப் பயன்படும் துணைக்கோள். உல்>முல்>மல்> மதி
 0. நெருப்பு> தேய்த்தலால் உருவான தீ. உல்> சேர்தல், தேய்த்தல், துளைத்தல் கருத்து வேர். சேர்வது தேயும் தேய்வது சூடேறும் சூடேறியது எரியும். உல் > சேர்தல் கருத்து வேர். உல்>நுல்>நுர்= ஒளி. நுல்> நெல் = ஒளி. உல்>நுல்>நெல்>நெர்>நெருப்பு.
 0. கலம்> உட்குடையப்பட்ட ஏனம். உல்= துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>கல்> கலம்.
 0. பட்டயம்> தட்டி பட்டையாக்கப் பெற்ற ஆவணம். உல்= பொருத்தல், மோதல் கருத்து வேர். உல்> புல்> புள்> பள்> பட்டு > பட்டை >> ஓங்கி பட்டென அடித்தலால் பட்டையானது. பட்டையான தகட்டில் எழுதப்பெற்ற உரிமை ஆவணம்.
 0. பட்டா > நிலப்பட்டா. பட்டையத்தில் எழுதப்பெற்ற நில உரிமை ஆவணம். ( grand)
 0. தட்டை> தட்டப்பெற்றுப் பட்டையாக்கப் பெற்ற ஏனம். உல்> துல்> துள்> தள்> தட்டு. தட்டு> தட்டை. ( உல்= பொருந்தல், மோதல் கருத்து வேர்)
 0. துணி> துணிக்கப் பெற்ற பஞ்சு நெயவு. உல்= துளைத்தல் கருத்து வேர். துளைத்தலால் பொருள்கள் சிதைந்து பிரியும். உல்> தும்> துண்> துணி.
 0. துண்டு > வெட்டப்பட்ட தனிப்பகுதி. உல்> துல்>தும்> துண்> துண்டு. துண்டுத் துணி ( towel) இறைச்சித் துண்டு. துண்டு + அம் = துண்டம். இறைச்சித் துண்டம்.
 0. கிளி > உணவைக் கிள்ளுவது போல்  கொத்தித் தின்னும் பறவை. உல்> குல்= குத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>கிள்> கிளி.
 0. கிள்ளை = கிளி. உல்>குல்>குள்>கிள் >கிள்ளை
 0. புழு> ஓட்டைப் போட்டுச் சென்று உணவுண்ணும் உயிரி. உல்> புல்= துளைத்தல் கருத்து வேர். உல்>புல்>புழு
 0. பல்> உணவை கூர்மையால் வெட்டி சிதைக்கும் வாயுறுப்பு. உல்> புல்= கூர்மை, குத்துதல் , துளைத்தல் கருத்து வேர். உல்>புல்>பல்.
 0. பலா> பருத்த பழம். பெரிதாய் இருப்பதால் இப்பெயர் பெற்றது. உல்= திரட்சி பொருள் வேர். உல் > புல்> பல்> பல. பல்> பலா . பல்> பர்> பருமை.
 0. சில்லி = சிறிய கற்கள், சிறுத்த பொருள் , சில்லி மூக்கு. உல்> துளைத்தல் பொருள் வேர். துளைக்கப் படுவது சிதைந்து சிறுக்கும். உல்>இல்> சில் = சிறுமைப் பொருள் அடி. சில்> சில்லி
 0. சிறுமை > அளவில் குறுகிய வடிவு, குறுகிய பண்பு. உல்>இல்>சில்>சிறு> சிறுமை
 0. சிட்டு> சிறிய பறவை, சிறியது. உல்>இல்>சில்> சிள்>சிட்டு.
 0. சிட்டை = சிறிதாய்த் துண்டு செயப்பெற்ற தாள். உல்> இல்> சில்> சிள்> சிட்டு> சிட்டை
 0. சீட்டு = சிறியதாய் நறுக்கப் பெற்ற தாள் துண்டு. உல்> இல்> சில்> சிள் > சிட்டு > சீட்டு
 0. அல்லி = இரவில் பூக்கும் மலர். உல் > அல் = கருமைப் பொருள் வேர். அல்= கருமையான இரவு. அல்லி = இரவில் பூக்கும் மலர்.
 0. பிணி > தொற்றும் நோய். உல் > சேர்தல் கருத்து வேர். உல்>புல்> புள்> பிள்> பிண்>பிணி.
 0. நோய்> உடலை நலியச் செய்யும் நோவு. உல்= துளைத்தல் கருத்து வேர். துளைக்கப்பட்ட பொருள் மெலியும் , நலியும், சிதையும். உல்>நுல்>நொல்> நொலி>நலி. உல்>நுல்>நொல்>நொய்>நோய்.
 0. நஞ்சு> உயிரை நலியச் செய்து சிதைக்கும் பொருள். உல்> துளைத்தல் கருத்துவேர். உல்>நுல்> நல்>நய்> நைந்து. நல்> நய்>நய்ந்து> நய்ஞ்சு> நஞ்சு
 0. பாசை> கரப்பான் பூச்சி. பசை போல் ஒட்டி அரிக்கும் பூச்சி. உல்= பொருந்துதல், சேர்தல், ஒட்டுதல் கருத்து வேர். உல்> புல்>பல்>பய்>பயை> பசை>பாசை
 0. கரப்பான்> கரிய இருட்டில் மறைந்து வாழும் பூச்சி. உல்> குல்>கல்= கருமைப் பொருள் வேர். கல்> கர்>கரு. கல்> கர்>கரப்பு> கரப்பான்.
 0. கரா> நீரில் மறைந்து வாழும் முதலை. உல்> குல்>கல்>கர்>கரா. ( croc)
 0. முதலை > தலையை நீட்டி முந்தித் தள்ளிக்கொண்டிருக்கும் ஊருயிரி ( ஊரி). உல்= முற்படுதல் கருத்து வேர். உல்> முல்> முது> முதல்> முதலை.
 0. எருமை > கரிய நிறமுடைய மா. உல்> இல்> இரு>இருமை> எருமை.

தொடரும்

இரா. திருமாவளவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக