செவ்வாய், 14 ஏப்ரல், 2020

வானியல் அடிப்படையில் வருடத் துவக்கம்


365 நாட்கள் கொண்டதே ஓர் ஆண்டு என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.  ஆனால் ஆண்டுத் துவக்கம் சித்திரை முதல்நாளா? அல்லது தை முதல் நாளா? என்பதில்தான் கருத்துவேறுபாடு.
ஆண்டு என்பது பூமியின் சுழற்சிக் காலமாகும்.  பூமியிலிருந்து பார்க்கும் போது, சித்திரை முதல்நாளோ அல்லது தைமுதல் நாளோ எதுவாகினம் சரி.  அன்று, வான்வெளியில் சூரியன் ஏதேனும் ஒரு நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து இருக்கும்.  தினமும் சிறிது சிறிதாகக் கிழக்குநோக்கி நகர்ந்து,365 நாட்களில் 360 பாகை பயணித்து, ஓராண்டு முடிவில் மீண்டும் முன்பிருந்த அதே நட்சத்திரக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்து விடும்.  இந்த வானியற்  கருத்திலும் யாருக்கும் மாற்றுக் கருத்து கியைடாது.

“விண்ஞான” அறிவியல் அடிப்படையில் -
பூமியில் இருந்து பார்க்கும் போது,
தை முதல் நாளில் சூரியன் மகரராசியில், உத்திராடம் நட்சத்திரத்தில் 2ஆம் பாகத்தில் காணப்படும்.
சித்திரை முதல் நாளில்  சூரியனானது,  ஆடு (மேஷம்) இராசியில், முதல் நட்சத்திரமான அசுபதி நட்சத்திரத்தில் 1ஆம் பாகத்தில் காணப்படும்.
மகரராசியை எந்தவொரு தமிழ் இலக்கியமும் தலைராசி எனக் குறிப்பிட வில்லை. ஆனால்,  முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரனின் நெடுநல்வாடையில் “ஆடு” தலையாக (முதன்மையாக)க் குறிப்பிடப் பெற்றுள்ளது.

நெடுநல்வாடை ...
.... நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக                             160
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்            165
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு ....

பண்டைத் தமிழ் இலக்கியமான நெடுநல்வாடையை அடிப்படையாகக் கொண்டால் ஆடு(மேஷ) இராசியை முதல் இராசியாகக் கொள்ள வேண்டியுள்ளது.  ஆட்டிற்குத் (மேஷத்திற்கத்) தமிழில் வருடை என்றொரு பெயரும் உண்டு.  வருடை என்ற பெயர் சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ளது.   ஆடு அல்லது வருடை ( மேஷ ) இராசியில் முதல் நட்சத்திரம் அசுபதி நட்சத்திரமாகும்.  ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ஆம் நாள் இந்த நட்சத்திரத்தில் சூரியனான் காணப்படும்.  மேஷராசியில் அல்து ஆடுராசியில் அல்லது வருடை இராசியில் சூரியன் தோன்றத் துவங்கும் நாளே வருடத்தின் துவக்க நாளாகும்.  ஒவ்வொரு நாளும் ஒருபாகை என்ற அளவில் சிறிது சிறிதாக ஒவ்வொரு நட்சத்திரமாக நகர்ந்து சென்று, 365 நாட்கள் கழித்து மீண்டும் சூரியனானது மேஷஇராசியில் உள்ள அசுபதி நட்சத்திரத்திற்கே வந்து விடும்.
ஆடு (மேஷ) இராசியில் அசுபதியில் துவங்கும் நட்சத்திரக் கட்டத்தை ஆவுடையார்கோயிலில் மாணிக்கவாசகர் சந்நிதியின் நிலைக்கதவின் நெற்றியில் சிற்பமாகச் செதுக்கியும் வைத்துள்ளனர்.
மேற்கண்ட “வானியல் ” அடிப்படையிலும், தமிழரின் நெடுநல்வாடையின் அடிப்படையிலும் தமிழருடைய ஆண்டுப் பிறப்பு என்பது சித்திரை முதல் நாளே ஆகும்.

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு இரண்டும் வேறுவேறானவை. இவற்றை ஒன்றாக்கினால் காலப்போக்கில் நாம் நமது இந்த இரு பண்பாடுகளில் ஏதேனும் ஒன்றை இழந்து விட நேரிடும்.
பொங்கலும் புத்தாண்டும் ஒன்றானால்,
(1) நாளடைவில் உழவர் திருநாள் என்பது மறைந்துவிடும்.
(2) பொங்கலிடுவது தமிழ்ப்புத்தாண்டிற்கானது என்றாகி விடும்.
(3) பின்வருடங்களில் ஆண்டுப் பிறப்பிற்கும் ஏறுதழுவுதலுக்கும் தொடர்பு இல்லை என்று வரும்.
(4) அதன் பின்வருடங்களில் ஆண்டுப் பிறப்பிற்குப் பொங்கல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாகி விடும்.
எனவே அன்புத் தமிழர்களே நமது முன்னோர் ஆய்ந்தறிந்து கண்ட மரபுவிழா நாட்களை மாற்ற முயல்வதைத் தவிர்ப்போம்.

சித்திரை 1 அன்று வருடப்பிறப்பு என்பது இது வானியல் அடிப்படையில் ஆனது. முதல் இராசியான ஆடு (மேஷ)இராசியில் சூரியன் தோன்றும் நாளான சித்திரை 1 அன்று வருடப் பிறப்ப் கொண்டாடப் படுகிறது.
இது எந்தவொரு மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, புலமையின் அடிப்படையிலோ, அரசியல் அடிப்படையிலோ அமைந்தது அல்ல. வானியல் அடிப்படையில் அமைந்தது. எனவே இதுவே உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான வருடப்பிறப்பு ஆகும். இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் இதுவே உலகில் உள்ள உயிர்களுக் கெல்லாம் பொதுவான வருடப் பிறப்பு ஆகும்.

வருடையில் (மேஷராசியில்) சூரியன் தோன்றும் நாளை வருடப் பிறப்பாகக் கொண்டாடுவோம்.
https://letters-kalairajan.blogspot.com/2019/01/blog-post_15.html

அனைவருக்கும் சாரிவரி தமிழ்வருடப்பிறப்பு நல்வாழ்த்துகள்.
அல்லவை தேய்ந்து அறம் பெருகட்டும்...
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
சாரிவரி, சித்திரை 1, செவ்வாய்க் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக