பழங்குடியின காலத்தில் இருந்தே
மலேசியா வரலாற்றில் தமிழர்கள் உள்ளனர்
-கடல்சார் ஆய்வாளர் ஒடிசா பாலு பேட்டி
சென்னை, நவ. 27-
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,
உலக அளவில் தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடுகளில் மலேசியா 2வது இடத்தில் உள்ளது. இங்கு 20 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்களில் 2 லட்சம் பேர் மலேசியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். தமிழர்களுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான உறவு ஆதி காலத்தில் இருந்தே, தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் பிரிட்டீஸ் வருகைக்கு பிறகு தமிழர்கள், மலேசியாவுக்கு இடப்பெயர்வு அடைந்தனர் என்பது உண்மைக்கு புறம்பானது. ஏனெனில், மலேசியாவில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய அறிமுகம் செய்து வைத்ததே தமிழர்கள்தான். பிரிட்டீஸ் அரசு 16ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில், இந்தியாவில் வணிகத்தை தொடங்கியது. ஆனால், போர்ச்சுகீசியர்கள், டச்சுகாரர்கள் வருகைக்கு முன்னரே தமிழர்கள் மலேசியாவில் வணிகம் மேற்கொண்டனர். அதாவது, மலேசியாவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடல் பயணம் மூலம் வணிகம் மேற்கொண்டவர்கள் தமிழர்கள். மலேசியா என்பது மலை, நிலம், கடல் சார்ந்த பகுதி அதனால், மலை சார்ந்த பகுதியை தமிழர்கள் மலையூர் என்று அழைத்தனர். அப்பெயரே பின்னர் மருவி மலேசியா என்று ஆனது. மலேசியாவில் தமிழர் மற்றும் தமிழ் மொழிக்கான பல நூற்றாண்டு கால அடையாளங்கள் ஏராளமாக உள்ளது. மலேசியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் 1000 தமிழ் சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் இச்சொற்கள் கலந்துள்ளன. தென்புலக்குடிகளான தமிழர்கள் எந்தவித புரிதலும் இன்றி உலகம் முழுவதும் வணிகம் செய்தவர்கள் அல்ல. தமிழர்கள் கடல் வணிகத்திற்காக ஓர் திட்டமிட்ட வழிமுறைகளை கடைபிடித்தனர். அதாவது, தமிழர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘திசைஆயிரத்து ஐநூற்றுவர்’ என்னும் ஆயிரம் திசைகளை அறிந்த 500 பேர் கொண்ட குழு மூலம் கடல் பயணம் மேற்கொண்டனர். அதுபோல், ‘பதினென்விசையறிந்தார்’ என்பவர்கள் இருந்தனர். இவர்கள், உலக அளவில் கடல் மூலம் 18 நாடுகளை சுற்றி அனுபவம் பெற்றவர்கள். முக்கியமாக திரைமீளர்கள் கடல் பயணத்திற்கு வலுவூட்டினர். இவர்கள், கடலின் மைய பகுதிக்கு சென்று, உயிர் சேதமின்றி, மீண்டும் அதே இடத்திற்கு வரும் அளவிற்கு திறமை கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டவை. இதில், 1,024 திசைகளை அறிந்த தமிழர்களை ‘கணியர்’ என்று அழைக்கப்பட்டனர். வெளிநாடுகளில் வணிகம் செய்யும் தமிழர்களை பல்வேறு பெயர்களில் அழைத்தனர். இதில், முத்து விற்பனையாளர்களை ‘பெர்லிஸ்’ எனவும், பவளம் விற்பனை செய்பவர்களை ’மணி கிரகத்தார்’ எனவும் அழைத்தனர். அக்காலத்தில், கடல் கொள்ளைகள் அதிகம் இருக்கும் என்ற காரணத்தால், முத்து, பவளம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை மாட்டு சாணி மூலம் மறைத்து வரட்டியாக கொண்டு சென்றனர். மலேசியாவில் உள்ள ‘குணாஞ்சிரை’ என்ற மலையின் பெயர், ‘குணக்கடல்’ என்ற கடல் பகுதி போன்றவை 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்மொழியின் அடையாளங்களாக நீடித்து வருகிறது. மலேசியாவில் உள்ள தெமியான், தெமுலான் என்ற பழங்குடியின மக்களின் பெயர்கள் தமிழில் உள்ளது. அதேபோல், மடகாஸ்கர் பகுதியில் வாழும் மக்களின் உருவத்தில் மாற்றம் இருந்தாலும், அவர்களது பெயர்கள் தமிழில் உள்ளதை பார்க்க முடியும். ஆங்கிலேயர்கள் போன்று சீனர்களை மலேசியாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் தமிழர்கள்தான். இந்தியாவில் கிபி 14ம் நூற்றாண்டுக்கு பிறகு ஏற்பட்ட பல நாடுகளின் பண்பாட்டு ஊடாட்டம் காரணமாக தமிழர் தொன்மங்கள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது. குறிப்பாக மலேசியாவில் உள்ள தமிழ் மொழியின் அடையாளங்கள், தமிழர் தொன்மங்கள், வணிக முறைகள், கடல் பயண திறமைகள் போன்றவை முழுமையாக தமிழர்களுக்கு தெரியாமல் உள்ளது. தமிழர் யார் என்று தமிழரே அறியும் போது, உலக அளவில் தமிழரின் சிறப்புகள் உயரும். அதற்கு ஏற்றாற்போல், தமிழர்கள் தங்களின் பல திறமைகளை மேலும் வளர்த்து திறனுடன் செயல்பட முடியும். அதனால், உலகம் முழுவதும் உள்ள தமிழர் அடையாளங்களை மீட்டெடுக்க, உலக அளவிலான முக்கிய பல்கலைக்கழகங்களில் ‘தமிழ் இயல் இருக்கை’ உருவாக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில் பொதிந்துள்ள தமிழர் தொன்மங்களை வெளி கொண்டுவர மலேசியா பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இயல் இருக்கை’ ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பாக்ஸ்
சமூக வலைத்தளங்களில் பண்பாட்டு ஆய்வு
உலகம் முழுவதும் உள்ள தமிழர் தொன்மங்களை, கடல் நீரோட்டம் மூலம் ஆமை வழியே கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒடிசா பாலு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, சமூக வலைதளம் மூலம் பல குழுக்களை ஏற்படுத்தி தகவல் திரட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில், ஆசிய தமிழ்ச் சங்கம் என்ற குழு மூலம் ஆசிய நாடுகளின் தமிழ் ஆய்வையும், மலாய குழு மூலம் மலேசியா ஆய்வையும், திரை மீளர் என்ற பெயரில் உலக தமிழர்களையும், தென் புலத்தார் என்ற பெயரில் மடகாஸ்கர், மலேசியா இடையிலான தமிழ் ஆய்வையும், ஐயை என்ற பெயரில் பெண்களுக்கான திறன் வளர் குழுவையும் ஏற்படுத்தி, வழிநடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் நடப்பாண்டில் அதிகம் அறியப்படும் நபர்களில் ஒருவராக ஒடிசா பாலு உள்ளார். பிபிசி செய்தி பிரிவு இது குறித்த ஓர் செய்தியில் ஒடிசா பாலு பதிவை 5 லட்சத்திற்கும் மேலானோர் பார்வையிடுகின்றனர் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக