ஜே.கோர்லே என்னும் ஸ்காட்லாந்தியர் 1813 ஆம் ஆண்டு எழுதிய "MAHRADU" என்ற இந்நூல், இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த ஆங்கில நூலாகும். மருதரசர்கள் 1801 யில் மறைந்த பின்பு
12 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த நூலாகும். மருதரசர்களின் வரலாற்றை பதிவு செய்த நூல்களில் மிக பழமையான நூல்.
சின்ன மருதுவின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அறிக்கையை முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக் கிறது. இந்த அறிக்கையைக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலா வின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்காகஸ் என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் ஒப்பாக சின்ன மருதுவின் சுதந்திரப் பிரகடனத்தை ஒப்பிடுகிறார்.
அந்த ஆங்கில நூலில் 14 முதல் 26 வரை உள்ள பக்கங்களில் பதிவிடப்பட்ட சின்ன மருதுவின் ஜம்புத்தீவு பிரகடனத்தின் தமிழாக்கத்தின் பகுதியை தமிழ்க் கூறும் நல்லுலகின் பார்வைக்கு வைக்கிறேன். இந்த ஆங்கில நூலை தமிழில் தந்தவர் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்,
பேரா நா.தர்மராசன் அவர்கள் ஆவார்.
ஜே.கோர்லேவின் "MAHRADU"
நூலில் இருந்து.....
--------------------------------------------------------
1800 ஆம் ஆண்டில் திப்பு மரணமடைந்து மைசூரைக் கைப்பற்றிய பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு எல்லா திசைகளிலும் மனித நேயத்துக்கு எதிரான முறையில் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தபொழுது, சிற்றரசர்கள் ஒவ்வொருவரையும் அழித்த பிறகு, அவர்களுடைய உடைமைகளை தான் கைப்பற்றியதோடு, வீரர்களை கொள்ளையடிக்க அனுமதித்த காலத்தில் மருது என்ற பாளையக்காரர் வாழ்ந்தார். அவர் பழமையான கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் முன்னோர்கள் இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் மதுரைப் பிராந்தியத்தில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய ஒரு பகுதியை ஒட்டிய கணிசமான ஒரு பிரதேசத்தை மூதாதையர்களிடமிருந்து பெற்றிருந்தனர்.
அரசுகளும், பேரரசுகளும் சரிந்து கொண்டிருக்கிற காலத்தில் வறுமை மற்றும் துன்பத்தால் மருது பரம்பரையில் படிப்படியாக வளம் குன்றியது. மருது சிறந்த பண்பாளர் கண்ணியமானவர். கிழக்கிந்திய கம்பெனியுடன் (இந்தியாவில் அவரது அரசுகளுடன் என்று குறிப்பிடுவது பொருந்தமானது) பல போர்களில் அவர் ஈடுபட்டார். ஒவ்வொரு சண்டையிலும் அவர் தோல்வியடைந்தாலும் கம்பெனி இராணுவத்திற்கு வெற்றி சுலபமாகக் கிடைக்கவில்லை. கடைசியில் கம்பெனிக்குக் கப்பம் கட்டுகின்ற தாழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டார். பிறகு கம்பெனி அரசாங்கம் அவருடைய ஆட்சிப் பிரதேசத்தைக் குறைத்தது. அதிகமான கப்பம் வசூலித்தது. அவமதிப்பான ஆணைகளை அனுப்பியது மற்றும் கொடுங்கோன்மையான இதர வழிகளையும் கடைப்பிடித்தது. மருது தன்னுடைய முன்னோர்களின் அதிகாரத்தை இழந்து அவர்களின் நிழலாக மாறினார்.
மருது, தன்னுடைய படிப்படியான வீழ்ச்சியைப்பற்றி அடிக்கடி சிந்தித்தார். பொதுமக்களும் நாள்தோறும் புகார் செய்தார்கள். அவருடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றாலும் அதை மறுபடியும் பெறுவதற்கு மற்றொரு முயற்சியை செய்ய அவரால் முடியாது. தன்னுடைய கெளரவத்தை சிறிதும் குறையாத அளவில் மரபுரிமையாக தன்னுடைய சந்ததியினரிடம் அவர் ஒப்படைக்க வேண்டும் என்று அவருடைய மதமும், கல்வியும் கற்பித்திருந்தன. திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரது வலிமையான குடும்பம் மற்றும் நாட்டின் எல்லா அரசர்களும் ஆங்கிலேயர்களின் காலடியில் கிடப்பதைப் பார்த்தார். ஒரு கெட்ட நேரத்தில் மருது பின்வரும் பிரகடனத்தை எழுதினார். கோட்டைகளின் முன் வாயில்களிலும் நாட்டிலுள்ள பொது இடங்களிலும் அதை ஒட்டச் செய்தார்.
"நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரகடனத்தை கவனமாகப் படிக்க வேண்டும்.
ஜம்பு தீபத்திலுள்ள எல்லாச் சாதியினர், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகத்தின் அரசராகிய முகம்மது அலி நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர் களுக்கு இடத்தைக் கொடுத்து இப்பொழுது விதவையைப் போல ஆகிவிட்டார். ஐரோப்பியர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறி இந்த நாட்டைக் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் இங்கு வசிப்பவர்களை நாய்களாக்க் கருதி அவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். மேலே குறிப்பிட்ட சாதியினரிடம் ஒற்றுமை யில்லை. நட்புணர்ச்சியில்லை. சுதேசி அரசர்கள், ஐரோப்பியர்களின் மோசடி களைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து நாட்டை முற்றாக அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
இந்த இழிபிறவிகளால் ஆளப்படுகின்ற இராஜ்ஜியங்களில் வசிப்பவர்கள் ஏழைகளாகிவிட்டார்கள். வயிற்றுக்குச் சோறில்லை. அவர்கள் துன்பப்பட்டாலும் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு மனிதன் ஆயிரமாண்டுகள் வாழ்ந்தால் கூட முடிவில் மரணம் வருவது நிச்சயம். கர்நாடக நவாப், திருமலை நாயக்கர் பரம்பரையில் விசுவநாத நாயக்கர் (தஞ்சாவூர்) ஆகியோர் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் சிறிதும் பாதிக்கப்படாதபடி தங்களது பரம்பரை உரிமையைப் பெறுவார்கள். அவருடைய இராஜ்ஜியங் களில் ஐரோப்பியர்களின் அதிகாரம் ஒழிந்து போவதால் நவாப்புகள் ஆட்சியில் இருந்ததைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும்.
இழிபிறவிகளை ஒழிப்பதற்கு ஒவ்வொரு பாளையத்திலும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள எல்லோரும் ஆயுதங்களோடு ஒன்று சேர வேண்டும். அப்பொழுது ஏழைகளுக்கும் துன்பமடைந்தவர் களுக்கும் உணவு கிடைக்கும். ஆனால் யாராவது இந்த இழிபிறவிகளின் ஆணைகளை நிறைவேற்றி நாய்களைப் போல மகிழ்ச்சியடைந்தால் அவர்கள் கருவறுக்கப்படவேண்டும். இந்த இழிப்பிறவிகள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு இந்த நாட்டை எப்படி அடிமைப்படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே, பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்கள் ஆகியோர் மீசை வைத்திருப்பவர்கள், வயலில் அல்லது மற்ற இடங்களில் பாடுபடுபவர்கள், இழிபிறவிகளிடம் வேலை செய்கின்ற சுபேதார்கள், ஜமீன்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் முதல் கட்டத்தில் தங்களுடைய வீரத்தைக் காட்டட்டும். அதாவது இந்த இழிபிறவிகளை எங்கு பார்த்தாலும் கொல்லட்டும். இந்த இழிபிறவிகளிடம் வேலை செய்பவர்கள் தங்களுடைய மரணத்திற்குப் பிறகும் நிம்மதி அனுபவிக்க மாட்டார்கள்.
இதை மறவாதீர்கள்! இதை
பின்பற்றாதவனுடைய மீசை என் மறைவிடத்து மயிருக்குச் சமம். அவன் உணவு ருசியில்லாமல் போவதுடன் ஊட்டமளிக்காது. அவர் மனைவி சோரம் போவாள். அவனுடைய குழந்தைகள் இழிப்பிறவிகளுக்குப் பிறந்த பிறவிகளாகக் கருதப்படும்.
ஐரோப்பியர்களால் இரத்தம் கலப்படமாகாத எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இதை யார் படித்தாலும் அல்லது படிக்கச் சொல்லிக் கேட்டாலும் இதை எழுதி தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலே சொன்னபடி இதை எழுதாதவர்கள், சுற்றறிக்கையாக இதை அனுப்பாதவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை செய்தவர்களாகக் கருதப் படுவார்கள். நரகத்தின் எல்லா தண்டனைகளும் அவர்களுக்குக் கிடைக்கும். இதைச் செய்யாத முசல்மான்கள் பன்றியின் இரத்தத்தைக் குடித்த பாவியாக இருப்பான். இந்தப் பிரகடனம் ஒட்டப்பட்டிருக்கும் சுவரில் இருந்து இந்தப் பிரகடனத்தை கிழிப்பவர்கள் ஐந்து மாபெரும் பாவங்களைச் செய்த குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் இந்த பிரகடனத்தைப் படித்து இதைப் பிரதியெடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படிக்கு
மருதுபாண்டியன்,
பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய இழிபிறவிகளுக்கு ஜென்ம எதிரி.
சீரங்கத்தில் வசிக்கின்ற புரோகிதர்கள் மற்றும் புண்ணியவான்களுக்கு மருது பாண்டியன் உங்களின் பாதங்களில் விழுந்து பலமுறை வணங்குகிறேன். தென்னாட்டு அரசர்கள், கோட்டைகளையும், மாதா கோயில்களையும், ஆலயங் களையும், தொழுகையிடங்களையும் கட்டினார்கள். அந்த மாபெரும் அரசர்களின் வழிவந்த பாளையக்காரர்கள், இந்த இழிப்பிறவிகளின் அநீதியான நடவடிக்கையால் வறுமையில் வாடுகிறார்கள். எவ்வளவு உயர்ந்த மனிதர்கள் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த இழிநிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர் நீங்கள். இந்தப்பணி வென்றிட..... என்னை ஆசிர்வதியுங்கள்."
இதைப் படித்த பொழுது இதே மாதிரியான பிரகடனத்தை நான் எங்கோ படித்திருந்ததாக உணர்ச்சி ஏற்பட்டது. ஆம்! சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அக்ரி கோலாவின் தலைமையில் வந்த ரோமானியப் படையெடுப்பாளர்
களை எதிர்த்துப் போர் புரியுங்கள் என்று கலடோனியா தளபதியான கால்காகஸ் தன்னுடைய படைவீரர்கள் முன்னால் நிகழ்த்திய உரை என் நினைவிற்கு வந்தது. மனித இயல்பு எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கும். அன்னியர்கள் எல்லோரும் கொடியவர்கள்; பணத்தாசை உள்ளவர்கள், உண்மையான வீரர்களுக்குரிய பெருந்தன்மை அவர்களுக்கு இருக்காது என்று எடுத்துக்காட்டுவது மருது பாண்டியரது பிரகடனத்தின் முக்கியமான நோக்கமாகும். கால்காகஸ்ஸின் நோக்கமும் அதுவே. அவர் ரோமானியர் களின் காட்டுமிராண்டித்தனம், பேராசை, ஊதாரித்தனம் ஆகியவற்றை வன்மையாக கண்டனம் செய்கிறார். தன்னுடைய நாட்டு மக்களின் முன்னோர்களின் நினைவு களைக் கூறி அவர்களின் குடும்பங்களைப் பற்றிப் பேசி அவனது ஆண்மையைத் தூண்டுகிறார். "ஆயுதங்கள் வீரர்களுக்குப் பெருமை சேர்கின்றன. இப்பொழுது கோழைகளுக்கு கடைசிப் புகலிடமாக இருக்கின்றன" என்றார்.
பிரிட்டனில் வசிக்கின்ற மிகச் சிறந்த மனிதர்களாகிய நாம், அடிமைப்படுத்திய நாடுகளிலிருந்து நெடுந்தூரத்தில் வசிக்கின்ற நாம், அந்த அடிமைகளைப் பார்க்காததன் மூலம் நமது கண்களை மாசு படியாமல் காப்பாற்றிக் கொண்ட நாம், இத்தகையக் கொடுஞ்செயல்களை அனுமதிக்கலாமா? படையெடுப்பாளர் களின் ஆணவத்திற்கு நாம் அடிபணிய மாட்டோம். இவர்கள் உலகத்தைக் கொள்ளையடித்தவர்கள், நாடுகளைச் சூறையாடிய பிறகும் கடல்களைத் தாண்டிச் சென்று கொள்ளையடிக் கிறார்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் நசுக்குகிறார்கள். கிழக்கிலும் மேற்கிலும் அவர்கள் அலைகிறார்கள். செல்வத்தையும், வறுமையையும் ஒரே மாதிரியான தீவிரத்துடன் பார்க்கிறார்கள். போலியான உரிமைகளைச் சொல்லிக் கொள்ளையடித்தும், மனிதர்களைப் படுகொலை செய்தும் அவர்கள் பேரரசுகளை உருவாக்குகிறார்கள்.
அவர்கள் அதைச் சமாதானம் என்கிறார்கள். நம்முடைய அன்புப் புதல்வர்களைக் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்து வெளிநாடுகளில் சண்டை போட அனுப்புகிறார்கள்.
நம்முடைய மனைவியர்களையும், புதல்வியர்களையும் நாம் மிகவும் நேசிக்கிறோம். அவர்கள் இந்தக் காட்டுமிராண்டிகளின் வன்முறைக்குத் தப்பினால், நட்பு என்ற முகமூடியால் காயப்படுத்தபடுகிறார்கள். நம்முடைய சொத்துக்களைக் கப்பம் என்ற பெயரில் அள்ளிக்கொண்டு போகிறார்கள். நாம் விளைவித்த தானியங்களைப் பறிமுதல் செய்கிறார்கள். சவுக்கடியாலும், கடுஞ்சொற்களாலும் நம்முடைய வலிமையை அழிக்கிறார்கள். அடிமைகள் முதலில் விலைக்கு வாங்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். பிறகு அந்த எஜமானர்கள் அவர்களுக்கு உணவு தருகிறார்கள். சீரழிந்து போன பிரிட்டன் அடிமையாக இருப்பதற்கும் அந்த அடிமைத்தனம் நீடிப்பதற்கும் கப்பம் கட்டித் திருப்தியடைகிறது.
இனிமேல் தப்பமுடியும் என்கிற நம்பிக்கை அழிந்துவிட்டது. ஏனென்றால் தம்மிடம் எஞ்சியிருக்கின்ற வீரமும், சுதந்திர உணர்ச்சியும் நம்முடைய மூர்க்கத்தனமான எஜமானர்களிடம் அதிக வெறுப்பைத் தூண்டுகிறது. ஆகவே, "அன்பார்ந்த சகோதரர்களே! சுதந்திர உணர்ச்சி இனிமேலும் இழக்காமல் காப்பாற்றியுள்ள நீங்கள் கலிடோனியாவைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இன்னுயிர்களை அர்ப்பணிப்போம் என்று அறிவியுங்கள். ரோமானியர்கள், அமைதிக் காலத்தில் ஆணவத்தோடு நடந்து கொள்வதைப் போல, வீரத்தோடும் போர் புரிவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நம்முடைய பிரிவினைகளும், வேற்றுமைகளும் அவர்களுக்கு உதவுகின்றன. எதிரிகளின் தவறுகளைப் பயன்படுத்தி அவர்களது இராணுவம் வெற்றி பெறுகிறது. வெற்றிதான் அந்த இராணுவத்தை சேர்த்து வைத்திருக்கிறது. தோல்வி யடைந்தால் அவர்கள் விரைவில் சிதறிப் போய் விடுவார்கள்."
பேராண்மை எனப்படுவது சுதேசியிடம் தான் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. மேலே தரப்பட்ட உரை, 19 ஆம் நூற்றாண்டின் ஆன்மாவைத் தூண்டக்கூடியது. ஆனால் நமது தத்துவ ஞானிகளால் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அதை பிரதியெடுக்க முடியாது. கவனமுள்ள வாசகர்கள் இந்த வீர உரைக்கும் மருதுபாண்டியருடைய பிரகடனத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். தன்னம்பிக்கையும் பெருமிதமும் உள்ள ஒரு வீரரை இந்தப் பிரகடனத்தில் பார்க்கலாம். மறுபக்கத்தில் இரும்புக் கரங்களால் ஒடுக்கப்பட்டு, பூமியில் அழுத்தப்பட்டுள்ள ஒரு வீரரின் வேதனைக் குரலை கேட்கிறோம்.
நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட நண்பர், இந்த பிரகடனத்தின் பிரதியை என்னிடம் தந்தார். இந்தியாவில் நம்முடைய பிரதேசங்களில் வசிக்கின்ற சுதேசிகளில் எண்ணற்றவர்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்கள். ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்திய அரசாங்கங்கள் மற்றும் ஆங்கிலேயர் களிடமிருந்து இந்தச் சிந்தனைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மருது தனக்கு எதிராக வீசுகின்ற சூறாவளிக் காற்றை எதிர்த்து நின்று கொண்டு இதை முழங்குகிறார். மற்றவர்கள் இதைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லலாம். ஆனால் என்னுடைய கருத்து அதற்கு எதிரானது.
இந்தப் பிரகடனத்தைப் பற்றிய செய்தி ஒரு மாவட்ட ஆட்சியருக்குக் கிடைத்தது. அவர் உடனே அதைப் பிரதியெடுத்து தலைமை அதிகாரிக்கு மிக அவசரமாக அனுப்பினார். தேசத் துரோகம்! கலகம்! என்று அவர்கள் கூக்குரலிட்ட்டார்கள். மருதுவையும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகள் அனைவரையும் கேவலமான முறையில் ஒழிப்பதற்கு உத்தரவுகள் உடனடியாக வெளியிடப் பட்டன. மருதுபாண்டியர் மிகவும் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டபடியால் மருது இந்தப் பிரகடனத்தைத் தயாரித்தார் என்று நான் கூறவில்லை. மருது இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நற்பண்புகளையெம், இனிமையான சுபாவத்தையும் அவமதித்துவிட்டார் என்று ஒத்துக்கொள்வதற்குக் கூட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மருது குடும்பத்திற்கு நடந்த மிகவும் பயங்கரமான கொடுமையை யாரும் கற்பனையில் கூட நியாயப்படுத்த முடியாது.
"ஜே.கோர்லே"
(1813)
----------------------------------------------------------------------
அகமுடையார் வரலாற்று
மீட்புப் பணியில்.....
சோ.பாலமுருகன்
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக