புன்கம்,
மிதவை,
பொம்மல்,
போனகம்,
அன்னம்,
ஓதனம்,
அயினி,
அடிசில்,
பாளிதம்,
பொருகு,
மினை,
பதம்,
பாத்து,
அமலை,
உணவு,
துப்பு,
அசனம்,
கவளம்,
சொன்றி,
நிமிரம்,
மடை,
கூழ்,
புழுங்கல்
மூரல்,
சோறு,
மிதவை,
அமலை,
சரு,
வல்சி,
துற்று,
புகர்.
இவை எல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? அரிசியில் சமைக்கும் சோற்றினை குறிக்க தமிழ் நிகண்டுகளில் காணப்படும் சொற்கள் தான் இவை.
.சமைப்பதற்கு பச்சரிசி, புழுங்கலரிசி என்பதான இரு வகையான அரிசியை பயன்படுத்துவது நமது பழக்கத்தில் இருக்கிறது. நெல்லை அவித்து குத்துவது புழுங்கல் அரிசி. அவிக்காமல் குத்தி எடுப்பது பச்சரிசி.
சோற்றினை அமுது என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. அமுது எனும் சொல் பெருவழக்காகச் சோற்றைக் குறிப்பதால் அமுது செய்தல், அமுதுபடைத்தல் அமுது பாறை அமுது மண்டபம் அமுதூட்டுதல், திருவமுது போன்ற சொல் வழக்குகளும் உண்டு.
சோற்றுடன் சேர்த்து கொள்ளும் பருப்பு போன்றவற்றை முன்னொட்டாகக் கொண்டும் பருப்பமுது கறியமுது, தயிரமுது, கன்னலமுது என்பதன வழக்குகளும் உண்டு.
என்ன விதமான சோறு என்ன விதமான பக்குவத்தில் சமைத்தால் அது நம் உடல் நலத்திற்கு என்னவிதமான பயனை தரும் என்று சித்த மருத்துவத்தில் விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சுருக்கமான சில குறிப்புகள்.
புழுங்கல் அரிசி சோறு சாப்பிட்டால் வாத கோபமும், பலமும், வலி ரோகங்களும் நீங்கும். இது நோயாளிக்கு உதவும். பச்சரிசி சாதமானது பலத்தையும், குழந்தைகளுக்கு மாந்தத்தையும் உண்டாக்கும். பித்த கோபத்தையும், கிரிச்சரத்தையும் நீக்கும். இதில் வாயு உள்ளது. நன்றாக சமைக்காத சாதத்தை சாப்பிட்டால் மலசலம் சிக்குவது தவிர, மறுநாளும் சீரணம் ஆகாது. அந்த அன்ன ரசம் உடலில் பரவாது. குழைந்த அன்னத்தை உண்டால் வாத பிரமேகம், இருமல், அக்கினி மந்தம், பலவீனம், பீனிசம் ஆகியவை உண்டாகும்.
சுத்த அன்னத்தை நல்ல காய்கறிகளோடு சேர்த்து சாப்பிட்டால் வாத பித்த சிலேஷ்மம் என்னும் மூன்று வித நோய்களுக்கும் நிவாரணம் உண்டு. சுத்த அன்னம் என்பது பழைய அரிசியை தவிடு, நொய் நீங்கும் படி நன்றாக தீட்டி , முழு அரிசியாக புடைத்து எடுத்து இள வெந்நீரால் கழுவி துணியில் கொட்டி சிறிது ஆற வைத்து ஒரு பாண்டத்தில் அரிசிக்கு மூன்று பங்கு நீர் விட்டு அடுப்பில் ஏற்றி அது நுரைகட்டி கொதிக்கும் போது அரிசியை அதில் போட்டு முக்கால் பாகமாக வெந்தவுடன் கரண்டியால் துழாவி வடித்து கொண்டு மறுபடியும் தணலில் வைத்து பக்குவப்படுத்தி இறக்கி கொள்வதாகும்.
பச்சரிசி பொங்கல் சாதம் சகல அலசரோக வயிற்றுப்பிசம், அங்கலக வாதம், வெப்பம் ஆகியவற்றை உண்டாக்கும். சம்பா பச்சரிசி பொங்கல் சாதம் விந்துவை வளர்க்கும். பாலுஞ்சோறும் உண்டால் பித்த கோபமும், தாகமும் விலகும். கொஞ்சம் மந்தம், உடல் வலிமை, வீரிய விருத்தி உண்டாகும். நெய்யும் சாதமும் கலந்து சாப்பிட்டால் வன்மை, விழிக்குளிர்ச்சி, சீரணம் ஆகியவை உண்டாகும். பித்த விகாரம் விலகும். இது பத்திய உணவாகும். இந்த கிருத உணவு சிகிச்சை வயதானவர்களுக்கே முக்கியமாகும்.
தினமும் சாப்பிடக் கூடிய அதிக சூடுள்ள அன்னமானது உதிரபித்தம், தாக பிரமை, மதரோகம் ஆகியவற்றை உண்டாக்கும். உணவின் இறுதியில் புளித்த தயிரும், உப்பும் சேர்த்து சாப்பிட்டால் தயிருக்கும், நெய்க்கும் நடுவாக தீனிப்பையில் இறங்கியுள்ள சகல பதார்த்தங்களும் உள்ள உணவில் திரி தோஷங்களையும் நீக்குவதோடு அந்த உணவு புழுக்கங் கொண்டு நெருக்கமுற்று சீரணமாகும்.
மோரும், சாதமும் கலந்து சாப்பிட்டால் ஜடராக்கினி அதிகரிப்பதோடு பித்தம், மேக மூத்திரம், முளை மூலம், பாண்டு, தாகம் கிரகணி, சிலேஷ்ம சோபை ஆகியவை நீங்கும். ரணங்களுக்கு ஆகாது. இவை அனைத்தும் அன்ன வகைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு சரியான முறையில் அன்னத்தை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம். நெல்லை வெள்ளூவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக