சங்க இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜூன், 2018

சங்க இலக்கியத்தில் வழிபாட்டுத் தொன்மங்கள்

     சங்க இலக்கியத்தில் வழிபாட்டுத் தொன்மங்கள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641 028
பேச : 9842495241.

     பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்குவது குறுந்தொகை ஆகும். இஃது எட்டுத் தொகையில் இடம் பெறும் அகநூல்களுள் ஒன்றாகும். இதில் கடவுளரைப் பற்றியும், கடவுள் வழிபாடு குறித்தும் பல்வேறு தொன்மக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழந்தமிழரின் சமய நம்பிக்கைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன.
தொன்மம் – விளக்கம்
தொன்மம் (ஆலவா) என்பது பழமை எனப் பொருள்படும். அகராதிகள் தொன்மம் என்பதற்கு பழமை, செய்யுளில் இடம் பெறும் எண்வகை வனப்புகளில் ஒன்று எனப் பொருள் தருகின்றன.பொதுவாக தொன்மம் எனப்படுவது பண்டைய மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கலைகள் போன்ற வாழ்க்கையைச் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்கு முறைகளைக் குறிக்கும்.
‘‘தமிழில் வீரம் என்பதற்கு நிகரான சொல்லாக ‘பெருமிதம்’ என்பதனை பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். அதுபோலவே புராணம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக ‘தொன்மை’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது’’(யாழ். சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப., 8)
தொன்மம் என்பது நமக்குள் புதிதாக உருவாவதன்று அது நம் பிறப்பிலிருந்தே உண்டு என்பதை, ‘‘தொன்மமானது மனத்தின் விழிப்புநிலையில் ஆழ்மனத்தில் கருப்பெறுகின்றது. நம்மைக் கேட்காமலேயே உடல் வளர்வதைப் போலவே இயற்கையாகவே தொன்மங்கள் உரம் பெறுகின்றன’’     ( கதிர்.மகாதேவன், தொன்மம், ப. 19) என்கிறார் கதிர் மகாதேவன்.
‘‘தொன்மம் என்பது புனிதமான உண்மை (ளுயஉசநன வுசரநன) என்கிறது அமெரிக்கானா கலைக்களஞ்சியம்.  மேலும், தொன்மம் செயல்பாட்டின் அடிப்படையில் சடங்குகளுடனும் சமயங்களுடனும் தொடர்புடைய சமுதாயம் சார்ந்த கதை’’ (யாழ்.சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப. 49) எனலாம்.
ஆலவா (மித்) என்ற ஆங்கிலச் சொல் ஆலவா என்ற கிரேக்கச் சொல்லின் வேர்ச் சொல்லாகும். இதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக ‘தொன்மம்’ கையாளப்பட்டு வருகிறது. கடவுள் பற்றியும் உயர்மனிதர்கள் பற்றியும் அமைந்த செய்திகள் தொன்மத்தில் அடங்கும்.
தொன்மம், பழமரபுக் கதைகள் இரண்டும் ஒன்றுமையுடையதாக இருப்பினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு தொன்மம் கடவுளர் செயல்களை விரித்துரைப்பது; பழமரபுக் கதைகள் மனிதர்களை முதன்மைப்படுத்துவது; சமயம் சார்ந்தும் சடங்குகளைப் பற்றி விளக்குவதும் தொன்மத்தில் அடங்கும்.
தொல்காப்பியம் தரும் விளக்கம்
தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் தொன்மம் என்பதற்கு,
‘‘தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே’’
என்கிறது தொன்மை எனப்படுவது, உரையோடு கூடிய பழமையாகிய கதைப் பொருளில் வருவது’’ (தொல் – செய். இளம்பூரணர் உரை, நூ.எ., 538)என்று இளம்பூரணர் உரை விளக்கமளிக்கிறது.
மேலும், முதல் பொருளுள் நிலம் பற்றிக் கூற விளைந்த தொல்காப்பியர்,
‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’
(தொல்., அகத்திணை., நூற்பா, 5)
என்ற இந்நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார்.
குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
குறுந்தொகையில் இடம் பெறும் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை,
1.முருகன் பற்றிய தொன்மம்
2.கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்
3.இயற்கை வழிபாடு
4.நடுகல் வழிபாடு  என நான்கு வகையாகப் பகுக்கலாம்.
முருகன் பற்றிய தொன்மம்
‘‘சேயோன் மேய மைவரை உலகம்’’ எனத் தொல்காப்பியம் செப்புவதிலிருந்து குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்பது புலனாகிறது.
குறுந்தொகையில் முருகன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.  முருகப் பெருமான் அசுரர்களை அழித்த புராணச் செய்தியை,
‘‘செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட்டி யானை
கழல்தொடிச் சேஎய் குன்றம்’’ (குறுந்.,பா.உ.1)
என்ற வரிகள் விளக்கி நிற்கின்றன.  இதேபோல் முருகன் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை,
‘‘அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இனர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து’’
(திருமுருகாற்றுப்படை, 59-60 வரிகள்)
எனத் திருமுருகாற்றுப்படையும்,
‘‘பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு
சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர்உழக்கி
தீஅழல் துவைப்ப திரிய விட்டெறிந்து
நோயுடை நுடங்கு சூர்மா முதல் தடிந்து
…………………
மாய அவுணர் மருங்குஅறத் தபுத்த வேல்’’
(பரிபாடல் செவ்வேள் 5 : 1-7 வரிகள்)
எனப் பரிபாடலும் எடுத்துரைக்கின்றன.  இச்செய்தியினைக் கந்தபுராணத்திலும் காணலாம்.
கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்
மலையின் ஒரு பகுதியில் இடம் பெற்ற அணங்கு போன்ற பெண் தெய்வம் அல்லது தெய்வத்தால் வரையப்பட்ட பாவை கொல்லிப்பாவையாகும்.
சேர மன்னனின் மலையின் மேற்குப் பகுதியில் வருத்தக் கூடிய கொல்லித் தெய்வம் இருந்ததனை,
‘‘பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய
நல்லியற் பாவை’’ (குறுந்தொகை, ப., 130)
என்ற பாட்டாலும்,
‘‘வல்வில் ஓரி கொல்லிக் குடவரை
பாவையின் …….. ……….. ……..’’
என்ற பாட்டாலும் அறிய முடிகிறது. மேலும்,
‘‘…………. ………… பயங்கெழு பலவின்
கொல்லிக் குடவரை பூதம் புணர்த்த
புதிதியல் பாவை’’                      
(குறுந்தொகை, ப., 145)
என்ற பாடல் வாயிலாகவும், கொல்லிமலையின் மேற்குப் புறத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவை உண்டென்பதை,
‘‘பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக்
குடவயின் ……….. …………… ……………
நெடுவரைத் தெய்வம் எழுதிய
வினைமான் பாவை’’
(நற்றிணை, பா.எ., 192)
என்ற பாடலின் வாயிலாகவும் உணர முடிகிறது. இவை கொல்லித் தெய்வம் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.
இயற்கை வழிபாடு
பண்டையத் தமிழர்கள் இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்தனர்.  அதனால், அச்சத்தைப் போக்க எண்ணி இயற்கையோடு கூடியியைந்து வாழ்ந்தனர்.
சங்க கால மக்கள் பெண்கள் பிறையைத் தெய்வமாக தொழுது வணங்கினர் என்பதை,
‘‘செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே’’
(குறுந்தொகை, ப., 459)
என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இப்பாடலில் பிறையைப் பலசமயத்தோடும் தொழுதனர் என்ற செய்தி இடம் பெறுகிறது.  மேலும் கன்னிப் பெண்களும் பிறையை வணங்கினர். இச்செய்தியை,
‘‘ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை’’       (அகநானூறு, பா.எ., 239)
என்னும் அகநானூற்றுப் பாடல் வரிகளும்,
‘‘குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழி சிறக்க நின்வலம்படு கொற்றம்’’
(மதுரைக் காஞ்சி, 193-194 வரிகள்)
எனும் மதுரைக் காஞ்சி வரிகளும் புலப்படுத்துகின்றன.
‘‘கன்னிப் பெண்கள் மட்டும் பிறையைத் தொழுவதற்கானக் காரணம் நல்ல கணவனைப் பெற்று இல்லறம் சிறக்கவும், கரு வயிற்றில் உருவாகவும், மழைவளம் சுரந்து வளம் பொழிய வேண்டும் என்பதற்காகவும் ஆகும்’’ (மேற்கோள் விளக்கம் – கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப., 62).
நடுகல் வழிபாடு
தம் நாட்டினைக் காக்கும் பொருட்டு, பகைவரோடு போரிட்டுப் பட்டு வீழ்ந்த வீரனுக்காக எடுக்கப்படுவது ‘நடுகல்’ எனப்படும்.
இந்நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் பெயரும் பீடும் எழுதி, தெய்வமாக வழிபட்டு வந்ததைத் தொல்காப்பியர் காலந்தொட்டு அறிய முடிகிறது.  இதனையே,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபின் கல்லொடு புணர’’
(தொல், புறத்., இளமபூரணர் உரை, நூ.எ., 63)
எனத் தொல்காப்பியம் மொழிகிறது.
மறக்குடியில் பிறந்த அனைவரும் இந்த நடுகல் வழிபாட்டைத் தம் இனத்திற்குச் சிறந்ததெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர். இச்செய்தியை,
‘‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே’’
(புறநானூறு, பா.எ., 335)
எனும் இப்புறநானூற்றுப் பாடலும் புலப்படுத்துகிறது.
இத்தகு புகழ்வாய்ந்த நடுகல்லில் வீரரது பெயரும் பீடும் பொறிக்கப்பட்டு இருப்பதற்கு,
‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்குநிலை மறவர்’’ (பா.எ., 67)
என்ற அகநானூற்றுப் பாடலே சிறந்த சான்றாகும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட நடுகல்லிற்கு வீரர்கள் தங்களது கிடுகினையும், வேல்களையும் வரிசையாய் நிரல்களாக நட்டு அரண் செய்தனர். இந்தச் செய்தியை,
‘‘மாலைவேல் நட்டு வேலி யாகும்’’ (குறுந்தொகை, ப., 358)
எனும் குறுந்தொகைப் பாடல் வரியும்,
‘‘கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண் போல’’ (பட்டினப் பாலை, 78-79 வரிகள்)
என்ற பட்டினப் பாலை வரிகளும் தெளிவாக உணர்த்துகின்றன.    இங்ஙனம் பழந்தமிழ் செவ்வியல் இலக்கியமான குறுந்தொகையில் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்கள் அமைந்து தமிழர் தம் பண்பாட்டினையும் சமயஞ்சார்ந்த நம்பிக்கையினையும் புலப்படுத்துகின்றன.

16/6/2018 கவுரியா வாட்சப்குழு

புதன், 20 ஜூன், 2018

அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள்

Thursday, 03 July 2014 03:19
நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

     அறிவியல் என்பதற்கு விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், ஆய்வுத்துறை, அறிவு, பொருளாய்வுத்துறை, புறநிலை ஆய்வுநூல், அறிவு பற்றிய துறை, பருப் பொருள்களை ஆயும் நூல் தொகுதி ஆகிய கருத்துக்கள் அகராதியை அலங்கரித்து நிற்கின்றன. மனித இனம், வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் யாவும் மேன்னிலையடைவதற்கு உறுதுணையாயிருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மண்ணியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பல துறைகள் அறிவியலில் அடங்கும். இவ்வாறான அறிவியலைப் பூமித் தாயின் மக்களில் ஒரு சிலர் அறிவியற் பூங்காவில் நுளைந்து தத்தமக்கான துறைகளில் ஆர்வங் கொண்டு உலக முன்னேற்றத்தில் உதவிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேவை மகேசன் சேவையாகும். இனி, பண்டைத் தமிழர்களின் பழமை வாய்ந்த அறிவியல் பற்றிய செய்திகள் பழந் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்ற பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல்  இலக்கண,  இலக்கிய  நூலை  யாத்த  தொல்காப்பியர் (கி.மு. 711) இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.

 (1) இவ்வுலகம்  ஐம்பெரும்  பூதங்களான நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர், என்பன கலந்ததொரு மயக்கமான சூழ்நிலையில் இவ்வுலகம் தோன்றிற்று என்பது ஓர் அறிவியல் உண்மையாகும். இவ்வுண்மையைத் தொல்காப்பியர் இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால் பின்வரும் பாடல் வரிகளில் நிறுவியுள்ளமை போற்றற்குரியதாகும்.

                       'நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
          கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
          இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத்
          திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.'
                                          – (தொல். பொருள். மரபியல் - 635)  

உலகமானது நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங்கலந்த மயக்கமாதலான், மேற்கூறப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழுவுதல் இல்லாமல், திரிவுபடாத சொல்லோடு தழுவுதல் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இவ்வண்ணம் தொல்காப்பியர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாய் நிலவெளி, விண்வெளி விஞ்ஞானம் பேசுவதையும் காண்கின்றோம்.

(2) புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிற்கு உயிர் இல்லை என்று கூறுவோர் பலர் இருந்த காலமது. இந்நிலையிற்றான் இந்தியத் தாவரவிஞ்ஞான மேதை ஜெகதீஸ் சந்திர போஸ் (Jegadish Chandra Bose,  கி.பி.30.11.1858- 23.11.1937) அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்வு, அறிவு என்பன உள்ளன என்பதை நிரூபித்துக் காட்டிப் பரிசும், பாராட்டும் பெற்றுக்கொண்டார். இதன்பின்புதான் மக்களும் அவைகளுக்கு உயிர் உண்டென்ற நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

ஆனால் இதற்கு இரண்டாயிரத்து ஐந்து நூறு (2,500) ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்காப்பியனார்  தாவரத்தின்  உயிர், உணர்வு, அறிவு  பற்றியும், மற்றைய  உயிரினங்களின்  அறிவு, உணர்வு, உயிர் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறிச் சூத்திரங்கள் அமைத்துள்ளார். அதில் பின்வரும் சூத்திரத்தில் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐந்தறிவுயிர், ஆறறிவுயிர் ஆகிய ஆறு வகையான உயிரினங்களில் உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களையும் அடக்கிக் காட்டப்பட்ட சீரினையும் காண்கின்றோம்.

                           'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
            இரண்டறி வதுவே அதனொடு நாவே
            மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
            நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
            ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
            ஆறறி வதுவே அவற்றொடு மனமே
            நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.' – (பொருள். 571)

ஓரறிவு உயிராவது உடம்பினாலே அறிவது என்றும், ஈரறிவு உயிராவது உடம்பினாலும;> வாயினாலும் அறிவது என்றும், மூவறிவு உயிராவது உடம்பினாலும;>  வாயினாலும், மூக்கினாலும் அறிவது என்றும், நாலறிவு உயிராவது உடம்பினாலும;>  வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும் அறிவது என்றும், ஐந்தறிவு உயிரானது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறிவது என்றும், ஆறறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும், மனத்தினாலும் அறிவது என்றும் தொல்காப்பியர் கூறுகின்றார். இவ்வண்ணம் உயிர்கள் ஆறு வகை ஆயின.
மேலும் தொல்காப்பியர் ஓரறிவிலிருந்து ஆறறிவுக்குரிய உயிரினங்களின் பெயர்ப் பட்டியலையும் தனித்தனியே வகுத்துத் தந்துள்ள சூத்திரச் சிறப்பினையும் பார்ப்போம்.

1. ஓரறிவு உயிர்கள்

                  'புல்லும் மரனும் ஓரறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 572)

2. ஈரறிவு உயிர்கள்

                   'நந்தும் முரளும் ஈரறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 573)

3. மூவறிவு உயிர்கள்

                   'சிதலும் எறும்பும் மூவறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 574)

4. நாலறிவு உயிர்கள்

                  'நண்டும் தும்பியும் நான்கறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.'  -- (பொருள். 575)

5. ஐயறிவு உயிர்கள்

                  'மாவும் புள்ளும் ஐயறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' --  (பொருள். 576)

6. ஆறறிவு உயிர்கள்

                  'மக்கள் தாமே ஆறறி வுயிரே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.'  --  (பொருள். 577)

புல், மரம், கொட்டி, தாமரை ஆகியவை ஓரறிவு உடையனவென்றும் நந்தும், முரளும், சங்கு, நத்தை, அலகு, நொள்ளை, சிப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன ஈரறிவு உடையனவென்றும் சிதலும், எறும்பும், அட்டை முதலியன மூவறிவு உடையனவென்றும் நண்டு, தும்பி, ஞிமிறு, சுரும்பு போன்றவை நான்கு அறிவினை உடையனவென்றும் நாற்கால் விலங்குகள், பறவைகள், பாம்பு, மீன், முதலை, ஆமை என்பன ஐவகை அறிவினை உடையனவென்றும் மக்கள், தேவர், அசுரர், இயக்கர் முதலாயினார் ஆறறிவு உயிர்களென்றும் கூறி உலக உயிரனைத்தையும் ஆறு வகையில் அடக்கிக் காண்பித்தவர் தொல்காப்பியர். இவற்றை உற்று நோக்கின், தொல்காப்பியர் காலத்தில் தாவரவியல், உடற்கூற்றியல், பறவையியல், விலங்கியல் போன்ற அறிவியற் துறைகள் மேம்பட்டிருந்தமை புலனாகின்றது.

புறநானூறு

(1) கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் ஐம்பெரும் பூதங்களான (i) நிலனையும், (ii)  வானையும், (iii)  காற்றையும், (iv)  நெருப்பையும், (v)  நீரையும், உலகம் கொண்டுள்ளது என்று சங்ககாலப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் ஓர் அறிவியற் பாடலைப் பாடியுள்ளார்.

                                              'மண் திணிந்த நிலனும்,
                    நிலம் ஏந்திய விசும்பும்,
                    விசும்பு தைவரு வளியும்,
                    வளித் தலைஇய தீயும்,
                    தீ முரணிய நீரும், என்றாங்கு
                    ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்.....' (புறம். 2: 1-6)

இதில் மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்த நீரும் உண்டாயின என்ற அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.

(2) சங்க காலப் புலவரான உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் கீழ்க் காணும் புறநானூற்றுப் பாடலில் 'செஞ்ஞாயிற்றின் வீதியும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைச் தாமே அவ்விடஞ் சென்று அளந்து அறிந்தவரைப் போல, அவை இப்படிப்பட்டவை என உரைக்கும் அறிவுடையோரும் உளர்' என்று விண்ணியல் விஞ்ஞானம் விரிவாய்ப் பேசப்படும் இலக்கிய விந்தையைக் காண்கின்றோம்.

                                 'செஞ்ஞா யிற்றுச் செலவும்,
              அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
              பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
              வளி திரிதரு திசையும்,
              வறிது நிலைஇய காயமும், என்றிவை
              சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
              இனைத்து என்போரும் உளரே....'  - (புறம். 30: 1-7)

அகநானூறு

கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் 'தோழி வாழ்வாயாக! நான் கூறுவதையும் கேட்பாயாக! மழையானது பெய்யும் இடத்தை விட்டுச் சென்ற ஆகாயத்திலே, சிறுமுயலாகிய மறுவானது தன் மார்பகத்தே விளங்கச் சந்திரன் நிறைந்தவனாகி, உரோகிணி தன்னுடன் சேரும் இருளகன்ற நடு இரவில், அதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாள் இரவில், வீதிகளிலே விளக்கு வைத்து, மாலைகள் தொங்கவிட்டுப் பழமையைத் தனக்குப் பெருமையாகவுடைய மூதூரில் பலருடன் ஒன்று கூடி விழாக் கொண்டாடுவார்கள்...' என்று சங்கப் புலவர் நக்கீரர் ஒரு சிறந்த பாடலைத் தந்துள்ளார்.

                            'அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
                              .................................................................
             மழைகால் நீங்கிய மாக விசும்பில்
            குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
            அறுமீன் சேறும் அகல்இருள் நடு நாள்:
            மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
            பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
            விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
                             ...........................................................................'     – (அகம். 141: 1, 6-11)

திருக்கார்த்திகைத் திருவிழாக் கொண்டாடும் வழக்கம் அன்றைய மக்கள் மத்தியில் நிறைந்திருப்பதை எம்மால் உணரமுடிகின்றது. சந்திரனும் கார்த்திகை நட்சத்திரமும் அண்மித்திருக்கும் நாளைத் திருக்கார்த்திகை நாள் என்று விழாவெடுத்துக் கொண்டாடினர். இதில், ஆகாயம், சந்திரன், உரோகிணி, திருக்கார்த்திகை என்று விண்வெளி அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.

பதிற்றுப்பத்து

கடைச் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் அறிவியல் பற்றிய செய்திகள் எவ்வண்ணம் பேசப்படுகின்றன என்பதையும் காண்போம்.

(1) நிலம், நீர், காற்று (வளி), வானம் (விசும்பு) ஆகிய நான்கினதும், விண்மீன்கள் (நாள்), கிரகங்கள் (கோள்), சந்திரன் (திங்கள்), சூரியன் (ஞாயிறு), பெருநெருப்பு (கணை அழல்) ஆகிய ஐந்தினதும் அளப்பரிய பேராற்றல்களைச் சங்கப் புலவர் குமட்டூர்க் கண்ணணார் சிறந்ததொரு பாடலை இரண்டாம் பத்தில் தந்துள்ளார்.

                                          'நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
                  அளப்பு அரியையே;
                  நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
                  ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை; ....'- (14: 1-4)

(2)  இனி மூன்றாம் பத்தில் சங்கப் புலவரான பாலைக் கௌதமனார் பாடியுள்ள ஒரு சீரிய பாடலையும் பார்ப்போம். நீண்ட தொலைவிலுள்ள வானத்திலிருந்து ஒளிவிடும் மின்னல் வெளிச்சம் விண்ணிலும் மண்ணிலும் பரவி நிற்பதாகவும், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் ஆற்றல் பற்றியும், ஒளி வீசிக் கொண்டு வானில் கதிரவன் சுடர்பரப்ப, அதற்குச்  சற்று  வடக்கேயுள்ள சிறப்புமிகு  வெள்ளிக்கோள் என்னும்  சுக்கிரன், பலன் தரும் மற்றக் கோள்நிலைகளும் பொருந்தி நிற்கையில் நல்ல மழை பொழியும் என்று கூறப்படுகின்றது.

                                  'நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு
                                    .................................................................................
               நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும்
                                    ...................................................................................
               வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
               வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
               பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப,
               கலிழும் கருவியொடு கை உற வணங்கி....' – (24: 1, 15, 23-26)

வெள்ளிக் கோள் வடக்கே தோன்றினால் நல்ல மழை பொழியும் என்பது ஒரு வழக்காகும். வானம், மின்னல், வெளிச்சம், விண், மண், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், கதிரவன், சுக்கிரன், மழை ஆகிய இயற்கை வளங்களைத் தொட்டுச் செல்லும் புலவர் ஆகாயத்தில் பறந்து திரியும் ஒர் அற்புதக் காட்சியை நம் முன் வைத்துச் சென்றுள்ளார்.
 
பரிபாடல்

கடைச் சங்கத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் அறிவியல் பேசும் பாங்கினை நல்லெழுநியார் என்னும் புலவர் யாத்த ஒரு பாடலில் காண்போம். 'சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்று உரைக்கப்படும் ஐந்தான அவையும் நீயே யாவாய்! இசைமை எனப்படும் முதலான ஓசையால் அறியப்படும் வானமும் நீயே! ஓசை, ஊறு என்னும் இரண்டானும் அறியப்படும் காற்றும் நீயே! ஓசை, ஊறு, ஒளி என்னும் மூன்றானும் உணரப்படும் தீயும் நீயே! ஓசை, ஊறு, ஒளி, சுவை என்னும் நான்கானும் உணரப்படும் நீரும் நீயே! ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்தானும் முற்ற உணரப்படும் நிலனும் நீயே! என்று திருமாலைப் போற்றுகின்றார்.

                       '....................................................
          சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
                        ...................................................
          ஓன்றனிற் போற்றிய விசும்பும் நீயே!
          இரண்டி னுணரும் வளியும் நீயே!
          மூன்றி னுணரும் தீயும் நீயே!
          நான்கி னுணரும் நீரும் நீயே!
          ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே!.......' – (பாடல் 13: 14, 18-22)


விசும்பும், வளியும், தீயும், நீரும், நிலமும் ஆகிய இயற்கையான ஐம்பொறிகளும் இங்கேயும் பேசப்படுகின்றன.

ஐங்குறுநூறு


இந்நூலின் பின்வரும் கடவுள் வாழ்த்தைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனும் கடைச் சங்கப் புலவர் பாடியுள்ளார்.

                                          'நீலமேனி வாலிழை பாகத்து
                  ஒருவன் இருதாள் நிழல்கீழ்
                  மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே.'


நீலநிற மேனியையும் தூய அணிகளையும் உடைய உமையவளைத் தன் உடலில் ஒரு பாகமாய்க் கொண்ட ஒப்பில்லாத சிவபெருமானின் இரண்டு திருவடிக் கீழ் மூன்று வகைப்பட்ட உலகங்களும் நிலை பெற்றுள்ளன. மூவகையுலகு என்பது மேல், நடு, கீழ் என்பனவாம். அவைதான் விண், மண், பாதலம் ஆகும். பரம்பொருளிலிருந்து வானம் தோன்றியது, வானத்திலிருந்து காற்றுத் தோன்றியது. காற்றிலிருந்து தீ தோன்றியது. தீயிலிருந்து நீர் தோன்றியது. நீரிலிருந்து நிலம் தோன்றியது என்று சிலர் உரைப்பர். இங்கே ஐம்பூதங்களின் பரம்பொருளையும் காண்கின்றோம்.

சிலப்பதிகாரம்

சங்கம் மருவிய காலத்தில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்  'திங்களைப் போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! மாமழை போற்றுதும்!' என்று பரந்த வானியல் பேசப்படுவதையும் காண்கின்றோம். இங்கே இயற்கையான சந்திரனையும், சூரியனையும், மாமழையையும் ஒரே நேரத்தில் ஏற்றிப் போற்றும் இலக்கிய மேதை இளங்கோவடிகள் விண்வெளி பேசும் விஞ்ஞானியாய் விண்ணில் பறந்து திரிவதையும்  உற்று நோக்கிப் பார்க்கின் தெளிவாகும்.

முடிவுரை

இதுகாறும் தொல்காப்பியத்தில் நிலம், ஆகாயம், தீ, நீர், காற்று ஆகிய ஐம்பூதங்கள் பற்றியும், தாவரத்தின் உயிர், உணர்வு பற்றியும், மற்றைய உயிரினங்களின் அறிவு, உயிர், உணர்வு பற்றியும், ஓரறிவிலிருந்து ஆறறிவுள்ள உயிரினங்களின் பெயர்ப்பட்டியல் பற்றியும், புறநானூற்றில் நிலனையும், வானையும், காற்றையும், நெருப்பையும், நீரையும் உலகம் கொண்டுள்ளது பற்றியும், ஞாயிற்றின் வீதியும், இயக்கமும், இயக்கத்தால் சூழும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானம் ஆகியவை பற்றியும், அகநானூற்றில் ஆகாயம், சந்திரன், உரோகிணி, திருக்கார்த்திகை ஆகியவை பற்றியும், பதிற்றுப்பத்தில் விண்மீன்கள், கிரகங்கள், சந்திரன், ஞாயிறு, நெருப்பு மின்னல், வெள்ளிக்கோள் ஆகியவற்றின் ஆற்றல் பற்றியும், பரிபாடலில் சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்பன பற்றியும், ஐங்குறுநூற்றில் விண், மண், பாதலம் ஆகிய மூவுலகு பற்றியும், சிலப்பதிகாரத்தில் சந்திரன், சூரியன், மாமழை என்று பரந்த வானியல் பற்றியும் பேசப்பட்டுள்ளதை மேலே பார்த்தோம்.

சங்க இலக்கியங்களில் இலக்கியம் மட்டும்தான் உள்ளது என்று கூறமுடியாது. அவற்றில் அறிவியல் சார்ந்த விடயங்களும் நிறைந்துள்ளன என்பதை மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். உலகம் நவீனமயமடைந்த வண்ணமுள்ளது. எனவே அறிவியல் சார்ந்த கல்வி மிக முக்கியம் வேண்டற்பாலது. தனி இலக்கியங்களைவிட அறிவியல் சார்ந்த இலக்கியங்கள் மக்களுக்குப் பெரும் பயனை நல்கும்.

சில இலக்கியங்களில் அறிவியலும் கலந்திருப்பது உண்மை. இதற்கு மேற்காட்டிய நூல்கள் சான்றாகும். இவற்றை இலக்கியக் கண்கொண்டு படித்தால் இலக்கியம் முன்வந்து நிற்கும். அதை அறிவியற் கண்கொண்டு பார்த்தால் அறிவியல்தான் முந்திநிற்கும். எனவே இலக்கியமும், அறிவியலும் சமநிலையில் அமைவது சாலச் சிறந்ததாகும்.

காலத்தால் மூத்த இலக்கிய, இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அறிவியல் சார்ந்த செய்திகளையும் புகுத்தி முதற் காலடியெடுத்து வைத்த பெருமை தொல்காப்பியனாரைச் சாரும். இவரைத் தொடர்ந்து பின்னெழுந்த சங்க இலக்கிய நூல்களிலும் அறிவியற் செய்திகள் பரந்து செறிந்துள்ளதையும் காண்கின்றோம். அறிவியல் சார்ந்த இலக்கியங்களின் வாழ்நாள் மிக நீண்டதென்பதும் தெளிவாகின்றது. மேற் காட்டிய நூல்கள் இதற்குச் சான்று பகரும். எனவே அறிவியலை முன்னிலைப்படுத்தி அதனால் வரும் பயனை ஏற்று எம் வாழ்வியலை மேம்படுத்தத் திடசித்தம் கொள்வோமாக!

wijey@talktalk.net

கவுரியா வாட்சப் குழு 10/06/2018 ஒரிசா பாலு அவர்கள் பகிர்தது